

சென்னை,
உலகம் முழுவதும் நாளைய தினம் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கிறிஸ்தவ மக்களுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது;-
அன்புதான் உலகின் ஆகப் பெரிய சக்தி என்பதை நிரூபித்து அதன் வழியாகவே மக்களின் மனங்களை வென்றெடுத்த இயேசுநாதர் அவதரித்த கிறிஸ்துமஸ் திருநாளைக் கொண்டாடி மகிழும் கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் இதயம் நிறைந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இயேசுநாதர் மனித குலத்திற்கு போதித்த முக்கியமான பண்பு மனம் திரும்புதல். இதனை அவர் தன்னுடைய பல பிரசங்கங்களில் எடுத்துரைத்திருக்கிறார்.
தவறு செய்தவர்கள் முதலில் மனம் திருந்த வேண்டும் என்கிற கிறித்துவத்தின் பிரதான போதனையைத்தான் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள், தன் படப்பாடல் வரிகள் மூலம் தவறு செய்தவன் திருந்தி ஆகணும்: தப்பு செய்தவன் வருந்தி ஆகணும் என்று சொன்னார்.
மனித வாழ்க்கையில் நம்பிக்கை என்னும் சக்தியைப் பெற்றுவிட்டால், இந்த உலகில் முடியாதது எதுவுமில்லை என்பது போன்ற இயேசுநாதரின் நல்வார்த்தைகள், நல்லவர்கள் அத்தனை பேருக்கும் எப்போதும் கலங்கரை விளக்கமாக திகழ்பவை.
அந்த அருளாளரின் சொற்களை மனதில் பதித்து, புத்தம்புது சாதனைகளைப் படைத்திடுவோம். உலகெங்கும் அமைதி நிலவி, அனைவரிடமும் ஆரோக்கியமும் அன்பும் நிறைந்திட கிறிஸ்துமஸ் நாளில் நெஞ்சார வாழ்த்துகிறேன்.
இவ்வாறு டிடிவி தினகரன் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.