கல்குவாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்

சென்னையில் அமைச்சருடன்நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்படுவதாக திருப்பூர் மாவட்ட குவாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
கல்குவாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்
Published on

பல்லடம்

கல்குவாரி

பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட கல்குவாரி, கிரஷர்கள் இயங்கி வருகிறது. கல்குவாரி தொழிலுக்கு உரிய முறையில் அனுமதி வழங்கவும், லைசன்ஸ் வழிமுறைகளை எளிதாக்கவும், சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் ஏற்படும் அச்சுறுத்தல்களை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடந்த மாதம் (ஜூன்) 26-ந் முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் கல்குவாரிகள், கிரஷர்கள், டிப்பர் லாரி உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர். காரணம்பேட்டையில் ஒரே இடத்தில் 700-க்கும் மேற்பட்ட லாரிகளை நிறுத்தி வைத்து கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் ரூ.1600 கோடி அளவிற்கு உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதால் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக கல்குவாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர். இது குறித்து திருப்பூர் மாவட்ட கல் குவாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது:-

போராட்டம் வாபஸ்

எங்களது போராட்டம் தொடர்பாக சென்னையில் இன்று (நேற்று) அமைச்சர், அதிகாரிகள், கல்குவாரி உரிமையாளர்கள் அடங்கிய முத்தரப்பு பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை வெற்றியடைந்தது. அரசு தரப்பில், சட்டத்திற்கு உட்பட்டு கல்குவாரி வழிகாட்டி முறைகள் செயல்படுத்தப்படும் என்று உறுதி அளித்துள்ளனர். எங்களது பல்வேறு கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் சில கோரிக்கைகளை, அரசு தரப்பு மற்றும் கல்குவாரி தரப்பு என இரு தரப்புகளில் இருந்தும் குழு ஒன்றை அமைத்து பிரச்சினைகளை ஆராய்ந்து, அதன் பின்னர் நடவடிக்கை எடுப்பதாக கூறப்பட்டுள்ளது. இதுவரை நடைபெற்ற எங்களது வேலை நிறுத்த போராட்டத்துக்கு ஆதரவளித்த, கட்டிட பொறியாளர் சங்கங்கள், ஹாலோ பிளாக் உற்பத்தியாளர் சங்கங்கள் மற்றும் பல்வேறு சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து சங்கங்களுக்கும், மற்றும் எங்களுக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றிகளைதெரிவித்துக்கொள்கிறோம். எங்களது போராட்டத்தால் கட்டுமான பொருட்கள் கிடைக்காமல் பாதிக்கப்பட்ட பொது மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் முடிவடைகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com