ஸ்மார்ட் மீட்டர் டெண்டர் அறிவிப்பை திரும்பப்பெறுக: அரசுக்கு டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல்

தனியாருக்கு தாரைவார்க்கும் வகையில் ஒப்பந்தப்புள்ளிகளை அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
ஸ்மார்ட் மீட்டர் டெண்டர் அறிவிப்பை திரும்பப்பெறுக: அரசுக்கு டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல்
Published on: 

சென்னை,

த.வெ.க. அரசு யாருக்காக ஆட்சி நடத்தப்போகிறது என்ற கேள்விதான் ஒட்டுமொத்த மக்களின் மத்தியிலும் தற்போது எழுந்துள்ளதாக டி.டி.வி. தினகரன் வலியுறுத்தி உள்ளார்.

ஒப்பந்தப்புள்ளி

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட 12 மண்டலங்களில் மறுசீரமைக்கப்பட்ட மின்விநியோக திட்டத்தின் மூலம் (Revamped Distribution Sector Scheme) ஸ்மார்ட் மீட்டர்களைப் பொருத்துவதற்காக தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் வெளியிட்டிருக்கும் ஒப்பந்தப்புள்ளிகளுக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஸ்மார்ட் மீட்டர்

சென்னை மாநகரத்தில் உள்ள அனைத்து நுகர்வோர்களுக்கும், மாநிலத்தின் பிற பகுதிகளில் உள்ள 50 லட்சம் தொழில் மற்றும் வணிக நுகர்வோர்களுக்கும் ஸ்மார்ட் மீட்டர்கள் அமைக்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்படும் என்ற நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றிருந்த அறிவிப்பை மின்சார வாரியமே செயல்படுத்த முன்வராமல், தனியாருக்குத் தாரைவார்க்கும் வகையில் ஒப்பந்தப்புள்ளிகளை அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணியைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் மின்சார வாரியத்தின் முடிவால், குடியிருப்புகளுக்கு வழங்கப்படும் 200 யூனிட் இலவச மின்சாரமும், விவசாயம் மற்றும் நெசவுத் தொழிலுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரமும் நிறுத்தப்படும் அபாயம் உருவாகும் என்பதோடு, மின்சார வாரியத்தில் தமிழக இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பும் பறிபோகும் சூழல் ஏற்படும் என மின்வாரியத் தொழிற்சங்கங்கள் கவலை தெரிவித்துள்ளன

டெண்டர் அறிவிப்பு

பீகார் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் இதேபோன்று ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை அமல்படுத்தி, ரீசார்ஜ் செய்ய தவறினால் மின் துண்டிப்பு மற்றும் அபராதம் விதிக்கப்பட்டதற்கு எதிராக, அம்மாநிலங்களை சேர்ந்த மக்கள் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராடி கொண்டிருப்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டியிருக்கிறது.

அதோடு, தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்படவிருக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டம் Prepaid திட்டமா அல்லது Postpaid திட்டமா? தமிழக மக்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள சலுகை தொடருமா? Peak Hour நேரத்தில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுமா? ஏற்கனவே உள்ள 3 கோடி மீட்டர்களின் நிலை என்ன? என மின் நுகர்வோரின் எந்தவொரு கேள்விக்கும் பதில் அளிக்காமல், மொட்டைக் கடுதாசி போல டெண்டர் அறிவிப்பை வெளியிட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.

யாருக்காக ஆட்சி

ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த ஐந்து மாதங்களில் தூய்மைப் பணிகள் தொடங்கி, குடிநீர் விநியோகம், அரசுப் பேருந்துகளுக்கான ஓட்டுநர்கள், நடத்துநர்கள் நியமனம், பாதாளச் சாக்கடைத் திட்டம், ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணிகள் என தமிழகத்தின் அனைத்துப் பணிகளையும் தனியாரிடம் ஒப்படைத்துவிட்டு, த.வெ.க. அரசு யாருக்காக ஆட்சி நடத்தப்போகிறது என்ற கேள்விதான் ஒட்டுமொத்த மக்களின் மத்தியிலும் தற்போது எழுந்துள்ளது.

எனவே, தமிழகத்தின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கூடுதல் சுமையை ஏற்படுத்துவதோடு, இளைஞர்களின் வேலைவாய்ப்பையும் கேள்விக்குறியாக்கும் சென்னை உட்பட 12 மண்டலங்களில் ஸ்மார்ட் மீட்டர்களைப் பொருத்துவதற்கு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டிருக்கும் ஒப்பந்தப்புள்ளிகளுக்கான அறிவிப்பை உடனடியாகத் திரும்ப பெற வேண்டும் என த.வெ.க. அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com