அங்கன்வாடி ஊழியர்களின் காத்திருப்பு போராட்டம் வாபஸ் - அமைச்சர் கீதாஜீவன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு

அமைச்சர் கீதாஜீவன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் தமிழகத்தில் நடந்த அங்கன்வாடி ஊழியர்களின் காத்திருப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
அங்கன்வாடி ஊழியர்களின் காத்திருப்பு போராட்டம் வாபஸ் - அமைச்சர் கீதாஜீவன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு
Published on

பள்ளி, கல்லூரிகளுக்கு மே மாதம் கோடை விடுமுறை விடுவது போல் அங்கன்வாடி மையங்களுக்கும் 1 மாதம் கோடை விடுமுறை விட வேண்டும். காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் நேற்று முன்தினம் முதல் மாநிலம் முழுவதும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களுக்கு முன்பாக தொடர் காத்திருப்பு போராட்டத்தை நடத்தி வந்தனர்.

இரவு முழுவதும் கலெக்டர் அலுவலகங்களிலேயே தங்கி தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். நேற்றும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர்

இதனை தொடர்ந்து அங்கன்வாடி ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு சுமுக தீர்வு காணுமாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவனுக்கு அறிவுறுத்தினார்.

அதன்பேரில், தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நேற்று காலையில் அமைச்சர் கீதாஜீவன், தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சங்கத்தின் மாநில தலைவர் எஸ்.ரத்தின மாலா, பொதுச்செயலாளர் டி.டெய்சி, பொருளாளர் எஸ்.தேவமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு ஏற்பட்டது.

இதுகுறித்து அமைச்சர் கீதாஜீவன் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின்படி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். 1 மாத கோடை விடுமுறை மற்றும் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கைகள் அரசு ஏற்கனவே பரிசீலனை செய்து வரும் கோரிக்கைகள் தான். இதுதொடர்பாக முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று விரைவில் நல்ல தகவல்களை தெரிவிப்போம் என அவர்களிடம் தெரிவித்து உள்ளோம். இதனை ஏற்று போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் சங்கத்தின் பொதுச்செயலாளர் டெய்சி கூறுகையில், 'எங்களது கோரிக்கைகளை முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று இந்த ஆண்டே நிறைவேற்றுவதாக அமைச்சர் உறுதியளித்து உள்ளார். அவரது உறுதிமொழியை ஏற்று 50 ஆயிரம் அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் நடத்தி வந்த காத்திருப்பு போராட்டத்தை வாபஸ் பெறுகிறோம்' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com