விவசாயிகள், ஆசிரியர்கள் மீதான வழக்குகள் வாபஸ்: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு

வரும் காலத்தில் போராட்டம் நடத்தும் ஜனநாயக உரிமைக்கு பாதுகாப்பு வழங்குவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் என்று மு.வீரபாண்டியன் தெரிவித்தார்.
விவசாயிகள், ஆசிரியர்கள் மீதான வழக்குகள் வாபஸ்: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு
மு.வீரபாண்டியன்
Published on: 

சென்னை,

விவசாயிகள் - ஆசிரியர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெற்றதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது என்று மு.வீரபாண்டியன் தெரிவித்தார். இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

அரசாணை வெளியிட்டுள்ளது

கடந்த 2021 முதல் 2026 வரை கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிய விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது போடப்பட்ட 600 வழக்குகள் திரும்பப் பெறப்பட்டு, அதில் தொடர்புடைய 92,000-க்கும் மேற்பட்டோர் வழக்குகளில் இருந்து விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

வழக்குகள் வாபஸ்

தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் கடந்த செப்டம்பர் 2, 2026 ஆம் தேதி தமிழ்நாடு முதல்-அமைச்சர் பேரவை விதி 110ன்கீழ் வெளியிட்ட அறிவிப்பின்படி போராடிய விவசாயிகள், ஆசிரியர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெற்ற தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது.

அனுமதி இல்லை என மறுப்பது

ஏப்ரல் 2026க்கு பிறகும் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதியினர் தங்களது நல்வாழ்வுக்கான கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனநாயக முறையில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். போராட்டம் குறித்து சட்டம், ஒழுங்கு, நிர்வாக வசதியை கருத்தில் கொண்டு காவல்துறைக்கு தகவல் தரப்பட்டு வருகிறது. இந்த தகவலை பெற்று கொள்ளும் காவல்துறை போராட்டம் தொடங்கும் நிலையில் அனுமதி இல்லை என மறுப்பதும், முதல் நாள் இரவு தொலைப்பேசி வழியாக அனுமதி இல்லை என மறுப்பதும் நடைமுறையாக இருக்கிறது.

ஜனநாயக உரிமை

கடந்த 6 மாதங்களாக சட்டரீதியான உரிமைகளுக்கும், நியாயமான கோரிக்கைகளுக்கும், அரசின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நடைபெற்ற போராட்டங்கள் தொடர்பாக போடப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தையும் திரும்ப பெற்று, வரும் காலத்தில் போராட்டம் நடத்தும் ஜனநாயக உரிமைக்கு பாதுகாப்பு வழங்குவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, முதல்-அமைச்சரையும், தமிழ்நாடு அரசையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X