2-வது நாளாக தீவிர சோதனை: சென்னையில் ‘இ-பதிவு’ இல்லாமல் வந்த 5,400 வாகனங்கள் பறிமுதல் 3,422 பேர் மீது வழக்குப்பதிவு

சென்னையில் ‘இ-பதிவு’ இல்லாமல் வந்த 5,400 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விதிகளை மீறி வந்த 3,422 பேர் மீது வழக்கு பதிவு செய்ததோடு, அவர்களின் வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
2-வது நாளாக தீவிர சோதனை: சென்னையில் ‘இ-பதிவு’ இல்லாமல் வந்த 5,400 வாகனங்கள் பறிமுதல் 3,422 பேர் மீது வழக்குப்பதிவு
Published on

சென்னை,

கொரோனா நோய்த்தொற்றால் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருவதை கருத்தில் கொண்டு அரசு ஊரடங்கை அறிவித்தது. கடந்த 10-ந்தேதி முதல் வருகிற 24-ந்தேதி வரை இந்த ஊரடங்கு நடைமுறையில் இருக்கிறது. இந்த ஊரடங்கு காலத்தில் காலை 6 மணி முதல் 10 மணி வரை அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கும், அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் வீட்டை விட்டு வெளியில் வர பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

இதுதவிர இதர பணிகளுக்கு வெளியில் வர வேண்டாம். தேவையில்லாமல் வெளியில் சுற்ற வேண்டாம் என்று அரசு உத்தரவு பிறப்பித்தது. இதற்காக போலீசாரையும் பல இடங்களில் கண்காணிப்பதற்காக நிறுத்தியது. அரசு இவ்வளவு அறிவிப்புகளை கூறியும், பொதுமக்கள் பலர் சாதாரண நாட்களை போலவே ஊரடங்கு காலங்களில் வெளியில் சுற்றி வலம் வந்தனர். இதனையடுத்து இ-பதிவு நடைமுறையை மீண்டும் அரசு கையில் எடுத்தது.

அதன்படி, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்கள் இ-பதிவு செய்ய வேண்டியது அவசியம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதிலும் சென்னையில் ஒரு சரக போலீஸ் பகுதிகளில் இருந்து மற்றொரு சரக போலீஸ் பகுதிகளுக்கு செல்வதற்கு இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் முதல் ஊரடங்கில் இ-பதிவு இல்லாமல் வருபவர்களை கண்காணிக்க போலீசார் தயாரானார்கள். சென்னையில் மட்டுமல்லாது, தமிழகத்தின் இதர பகுதிகளிலும் போலீசார் கெடுபிடி அதிகரித்தது.

சென்னையில் நேற்று முன்தினம் பிரதான சாலைகளில் போலீசார் கெடுபிடி காட்டியதால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பொதுமக்கள் வாகனங்களுடன் வரிசையாக நின்றனர். விதிகளை மீறியதாகவும், இ-பதிவு இல்லாமல் வந்ததற்காகவும் நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் சென்னையில் 3 ஆயிரத்து 315 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், 4 ஆயிரத்து 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக சென்னையில் நேற்றும் 2-வது நாளாக போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். சென்னை அண்ணாசாலையில் 3 பாதைகள் அமைக்கப்பட்டு, ஆம்புலன்ஸ் செல்வதற்கு தனிப்பாதை, இருசக்கர வாகனம், கார்கள் செல்வதற்கு தனித்தனி பாதைகள் அமைக்கப்பட்டு, போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதேபோல், சென்னையில் 153 இடங்களில் வாகன சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் கண்காணித்தனர்.

இ-பதிவு இல்லாமல் வந்தவர்களையும், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறி வந்தவர்களையும் பிடித்து, வழக்குப்பதிவு செய்ததோடு, அவர்களின் வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அந்தவகையில், இதுவரை சென்னையில் கொரோனா ஊரடங்கு வழிகாட்டு நெறிமுறைகளை மீறியது தொடர்பாக 3 ஆயிரத்து 422 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 5 ஆயிரத்து 428 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், இதுவரை முககவசம் அணியாத 3 ஆயிரத்து 518 பேர், சமூக இடைவெளியை பின்பற்றாத 391 பேர் மீது வழக்குப்பதிவு செய்தும், அரசின் வழிகாட்டுதல்களை மீறி செயல்பட்டதாக 75 கடைகள் மூடப்பட்டு, அவர்களிடம் இருந்து ரூ.9 லட்சத்து 90 ஆயிரத்து 500 வசூலிக்கப்பட்டு இருப்பதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com