

நாகர்கோவில்,
நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு பிரமாண்டமான கோட்டை வடிவிலான பந்தல் மற்றும் விழா மேடை அமைக்கப்பட்டுள்ளது.
இதனை நேற்று தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் பார்வையிட்டனர்.
பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
தொழில்துறை தொடர்பாக கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். அவர் அரசியலை புரிந்து கொள்ளாமல், எந்த கருத்தையும் தெரிந்து கொள்ளாமல் அரைவேக்காட்டுத்தனமாக கருத்துகளை தெரிவித்து வருகிறார். ஜெயலலிதா முதல்-அமைச்சராக வந்த பிறகு தான் உலக தொழிலாளர்கள் மாநாட்டை முதன் முதலாக நடத்திக் காட்டினார். தமிழகத்தில் மின்தட்டுப்பாடு இல்லை. தொழில்துறையில் முன்னோடி மாநிலமாக தமிழகம் விளங்குகிறது.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறிய ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி பதில் தெரிவித்து, அவருடைய சவாலையும் ஏற்றுள்ளார். அதற்கு மு.க.ஸ்டாலின் பதில் சொல்லவில்லை. குற்றச்சாட்டுகளை யார் வேண்டுமானாலும், யார் மீதும் கூறலாம். ஆனால் அவரால் நிரூபிக்க முடியாது. 2016-ம் ஆண்டு தேர்தலில் முதல்-அமைச்சராக ஆகிவிடலாம் என அவர் கனவு கண்டார். அது நிராசையாகிவிட்டது. ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு ஏதாவது பிளவு ஏற்பட்டு ஆட்சி மாற்றம் வராதா? என அவர் கனவு காண்கிறார். மக்கள் பணிகளை செய்ய ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை அவர் கூறவும் இல்லை. ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சி தலைவராக செயல்படவும் இல்லை.
ஜெயலலிதா உயிரோடு இருந்த போது நடந்த நாடாளுமன்ற தேர்தலில் வரலாற்று சாதனை வெற்றியை அ.தி.மு.க. பெற்றது. அவருடைய வழியில் மக்கள் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனால் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றியை போல் வருகிற தேர்தலிலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.