

சென்னை,
நேபாள நாட்டை சேர்ந்தவர் தம்பருஅஸ்ரிகா (வயது 50). இவரது மனைவி மாயா(41). இவர்கள் கடந்த 4 மாதங்களாக சென்னை அம்பத்தூர், மங்களபுரம் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி வேலை செய்து வருகின்றனர். இருவரும் மது அருந்தும் பழக்கம் கொண்டவர்கள் என கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் இரவு இருவரும் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. அதில் ஆத்திரமடைந்த தம்பரு அஸ்ரிகா, தனது மனைவி மாயாவின் உடமைகளை தீயிட்டு கொளுத்தியுள்ளார்.
இதை கண்டு ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற மாயா, அருகில் கிடந்த மரக்கட்டையை எடுத்து தனது கணவரின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். தலையில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் மாயா மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.