தஞ்சை பெரிய கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும்போது ரூ.25 ஆயிரம் திருடிய பெண் கைது

தஞ்சை பெரிய கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும்போது ரூ.25 ஆயிரம் திருடிய பெண்ணை கையும், களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
தஞ்சை பெரிய கோவிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மன், வராகி அம்மன், விநாயகர், தட்சிணாமூர்த்தி, முருகன், நடராஜர் மற்றும் சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன. இந்த சன்னதிகளில் உள்ள 11 உண்டியல் காணிக்கைகளை ஒவ்வொரு மாதமும் திறந்து எண்ணுவது வழக்கம்.
அதன்படி இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் பெரியநாயகி அம்மன் சன்னதியில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் வங்கி ஊழியர்கள், தன்னார்வலர்கள், கோவில் ஊழியர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டு இருந்தனர். கண்காணிப்பு கேமரா மூலம் உண்டியல் பணம் எண்ணும் பணி கண்காணிக்கப்பட்டது.
பணம் எண்ணும் பணி மும்முரமாக நடந்து கொண்டு இருந்த நிலையில் அந்த பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர், யாரும் பார்க்காத வகையில் ரூ.500, ரூ.200, ரூ.100 என ஒவ்வொன்றாக பணத்தை லாவகமான முறையில் எடுத்து தனது மடியில் ஒளித்து வைத்து கொண்டிருந்தார்.
பின்னர் தான் எவ்வளவு பணம் திருடியுள்ளோம் என்று பார்க்க ஆசைப்பட்ட அந்த பெண், பணத்தை எண்ணுவதற்காக மறைவான இடத்தை நோக்கி சிறிது தூரம் நடந்து சென்றார். அப்போது சில ரூபாய் நோட்டுகள் கீழே சிதறி விழுந்துள்ளது. அதைப்பார்த்த கோவில் ஊழியர் வீரமணி, அந்த பெண்ணை கையும், களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில் பணத்தை திருடிய பெண் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்த போஸ் என்பவரின் மனைவி இந்திரா(60 வயது) என்பதும், உண்டியல் காணிக்கை ரூ.25 ஆயிரத்து 780-ஐ அவர் திருடியதும் தெரிய வந்தது.
மேலும் அவர் பணம் எண்ணும் பணியில் தன்னார்வலராக சேர்ந்து முதல் முறையாக பெரியகோவிலில் பணம் எண்ணும் பணியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இது குறித்து தஞ்சை அரண்மனை தேவஸ்தான செயல் அலுவலர் சத்யராஜ் அளித்த புகாரின் பேரில் தஞ்சை மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்திராவை கைது செய்தனர்.