பெண்ணை தாக்கி 7 பவுன் தாலி சங்கிலி பறிப்பு

சின்னசேலம் அருகே பெண்ணை தாக்கி 7 பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்
பெண்ணை தாக்கி 7 பவுன் தாலி சங்கிலி பறிப்பு
Published on

சின்னசேலம்

பெண்ணுக்கு கத்தி வெட்டு

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த மேலூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் முத்துசாமி மனைவி பூபதி(வயது 60). இவர் நேற்று முன்தினம் இரவு கதவை உள்பக்கமாக சாற்றி விட்டு தாழ்ப்பாள் போடாமல் வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தார்.

இதை நோட்டமிட்ட 2 மர்ம நபர்கள் வீட்டின் கதவை நைசாக திறந்து உள்ளே புகுந்து திருட முயன்றனர். இதில் சத்தம் கேட்டு படுக்கையில் இருந்து எழுந்த பூபதி மர்ம நபர்களை கண்டதும் கூச்சலிட்டார்.

அப்போது வீட்டில் பணம், நகை எதுவும் இல்லாததால் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் தங்களிடம் இருந்த கத்தியால் பூபதியின் கையில் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

பூபதியின் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

ரூ.50 ஆயிரம் கொள்ளை

இந்த நிலையில் பூபதியின் வீட்டில் இருந்து தப்பி சென்ற மர்ம நபர்கள் அருகில் உள்ள எரவார் கிராமத்துக்கு சென்றனர். அங்கு தெற்கு தெருவை சேர்ந்த வையாபுரி மனைவி பழனியம்மாள்(61) என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த அவர்கள் பீரோவில் இருந்த ரூ.50 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்துக்கொண்டு வெளியே வந்தனர்.

தங்க சங்கிலி பறிப்பு

அப்போது அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் மனைவி ஜீவா(36) என்பவர் வீட்டில் இருந்து வெளியே வந்தார். புதருக்குள் பதுங்கி இருந்த மர்ம நபர்கள் திடீரென ஜீவாவின் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் சங்கிலியை கத்தியால் அறுக்க முயன்றனர். இதனால் சுதாரித்துக்கொண்ட ஜீவா தங்க சங்கிலியை விடாமல் கைகளால் இறுக்கி பிடித்தபடி மர்ம நபர்களிடம் போராடினார். இருப்பினும் மர்ம நபர்கள் ஜீவாவை தாக்கி விட்டு தங்க சங்கிலியை கத்தியால் அறுத்து பறித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடந்த ஜீவா கூச்சல் எழுப்பினார். இ்ந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

பறிபோன தங்க சங்கிலியின் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

போலீசார் விசாரணை

இந்த சம்பவத்தை அறிந்த கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராமன், சப்-இன்ஸ்பெக்டர் பாரதி மற்றும் போலீசார் விரைந்து சென்று சம்பவம் நடந்த இடம் மற்றும் வீடுகளை பார்வையிட்டு அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

இதில் 2 மர்ம நபர்களில் ஒருவர் முகமூடி அணிந்து இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவம் நடந்த பகுதியில் ஏதேனும் காண்காணிப்பு கேமராக்கள் உள்ளதா? அதில் கொள்ளையர்கள் நடமாட்டம் தெரிகிறதா? என ஆய்வு செய்து வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com