

திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் அருகே கடந்த 2020-ம் ஆண்டு, முன்விரோதம் காரணமாக புங்கனூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை, அதே பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை (வயது 55) என்பவர் அசிங்கமாக பேசி அரிவாளால் தாக்கியது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கங்கைகொண்டான் காவல் நிலைய முந்தைய போலீஸ் இன்ஸ்பெக்டர் சோபாஜென்சி புலன் விசாரணை மேற்கொண்டு அந்த நபரை கைது செய்தார்.
புலன் விசாரணை முடிவில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்து, வழக்கின் விசாரணையானது திருநெல்வேலி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், செல்லத்துரை மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, நீதிபதி ராமலிங்கம் நேற்று குற்றவாளிக்கு, கொலை முயற்சி குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் திறம்பட சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்த திருநெல்வேலி ஊரக உட்கோட்ட டி.எஸ்.பி. ரகுபதிராஜா, கங்கைகொண்டான் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்கனி, இந்த வழக்கினை திறம்பட புலன் விசாரணை செய்த அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் சோபாஜென்சி (தற்போது தூத்துக்குடி மாவட்டம்), வழக்கின் விசாரணைக்கு உதவி செய்த பெண் ஏட்டு கன்னிமரியாள் மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தர சிறப்பாக வாதிட்ட அரசு வழக்கறிஞர் ஜெயபிரபா ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. பிரசண்ணகுமார் பாராட்டினார்.
2026-ம் ஆண்டில் இதுவரை 3 கொலை முயற்சி வழக்குகளில் குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு 6 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. இதில் ஒரு சரித்திர பதிவேடு உடைய குற்றவாளி உட்பட, 3 குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்ட காவல்துறையானது, நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளில் சாட்சிகளை ஆஜர்ப்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரும் முனைப்பில் தொடர்ந்து உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.