கொடுங்கையூரில் பணத்தகராறில் பெண் அடித்துக்கொலை

கொடுங்கையூரில் பணத்தகராறில் பெண் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.
கொடுங்கையூரில் பணத்தகராறில் பெண் அடித்துக்கொலை
Published on

பெரம்பூர், 

சென்னை கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகர், கண்ணன் தெருவைச் சேர்ந்தவர் அன்பு. கூலி தொழிலாளி. இவருடைய மனைவி வேளாங்கண்ணி(வயது 47). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர்கள் இருவரும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்கள். நேற்று காலை அன்பு, அவருடைய மகன், மகள் ஆகியோர் வேலைக்கு சென்று விட்டனர். வீட்டில் வேளாங்கண்ணி மட்டும் தனியாக இருந்தார். மாலையில் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த மகன் மரிய லாரன்ஸ், வீட்டுக்குள் தனது தாய் வேளாங்கண்ணி தலையில் காயத்துடன் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த கொடுங்கையூர் போலீசார், வேளாங்கண்ணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். புளியந்தாப்பு உதவி கமிஷனர் அழகசேன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சரவணன், சந்திரசேகர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் வேளாங்கண்ணியின் நெருங்கிய உறவினர்கள் 2 பேர் அவரது வீட்டுக்கு வந்து சென்றது தெரிந்தது.

மேலும் விசாரணையில், நேற்று மாலை வீட்டில் தனியாக இருந்த வேளாங்கண்ணியிடம் அங்கு வந்த அவரது உறவினர்கள் 2 பேர் பணம் கேட்டு தகராறு செய்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள், வேளாங்கண்ணியை அடித்து உதைத்ததுடன், தலையை சுவரில் முட்டியதாக தெரிகிறது. இதில் படுகாயம் அடைந்த வேளாங்கண்ணி, ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை வைத்து வேளாங்கண்ணியின் உறவினர் ஒருவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com