

தென்காசி,
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே வாழைத்தோட்டத்தில் பெண் ஒருவர் எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், உயிரிழந்த பெண்ணின் கணவர், கொழுந்தன் மற்றும் மாமியார் ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் முருகன் (வயது 45). இவரது மனைவி குட்டிமாரி (வயது 33). இவர்கள் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் புளியந்தோப்பு பகுதியில் தங்கி, பிளாட்பாரங்களில் துணி வியாபாரம் செய்து வந்தனர். முருகனின் தம்பி ரவி (வயது 40) மற்றும் தாயார் சிவகாமி ஆகியோரும் இவர்களுடன் வசித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், நேற்று (வெள்ளிக்கிழமை) சுரண்டை - சுந்தரபாண்டியபுரம் சாலையில் உள்ள ஒரு வாழைத்தோட்டத்தில் அடையாளம் தெரியாத பெண்ணின் உடல் எரிந்த நிலையில் கிடப்பதாக காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், குற்றவாளிகளைப் பிடிக்க 3 தனிப்படைகளை அமைத்து உத்தரவிட்டார்.
தனிப்படை போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், எரிந்த நிலையில் மீட்கப்பட்ட உடல் கடையநல்லூரைச் சேர்ந்த குட்டிமாரியுடையது என்பது உறுதியானது. இதையடுத்து அவரது குடும்பத்தினரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கொழுந்தன் ரவிக்கும், அண்ணி குட்டிமாரிக்கும் இடையே பழக்கம் இருந்துள்ளது. அதனைக் கைவிடுமாறு ரவி அண்ணியிடன் கூறியுள்ளார். ஆனால், குட்டிமாரி அதற்கு மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த ரவி, துண்டால் அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.
கொலையை மறைப்பதற்காக ரவி, தனது அண்ணன் முருகன் மற்றும் தாயார் சிவகாமி ஆகியோரின் உதவியுடன் குட்டிமாரியின் உடலை சுரண்டை அருகே உள்ள வாழைத்தோட்டத்திற்குக் கொண்டு சென்று பெட்ரோல் ஊற்றி எரித்தது விசாரணையில் அம்பலமானது.
இதையடுத்து, கொலை மற்றும் தடயங்களை அழித்த குற்றத்திற்காக ரவி, முருகன் மற்றும் சிவகாமி ஆகிய 3 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.