தவெகவில் எம்.எல்.ஏ. சீட் கேட்டு குடிபோதையில் அவசர போலீஸ் உதவி எண்ணுக்கு அழைத்த பெண்
கோவை,
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி நடைபெற உள்ளது. தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முனை போட்டி நிலவுகிறது. ஒவ்வொரு கட்சியிலும் வேட்பாளர்கள் தேர்வு பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் இருந்து அவசர போலீஸ் உதவி எண் 100-க்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய ஒரு பெண், தனக்கு தமிழக வெற்றிக் கழகத்தில் எம்.எல்.ஏ. சீட் தர மறுக்கிறார்கள், அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் கூறியுள்ளார். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் அந்த பெண் பேசிய எண்ணை வைத்து அவரது இருப்பிடத்தை கண்டறிந்தனர். அங்கு சென்று விசாரித்தபோது, அந்த பெண் குடிபோதை யில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த பெண்ணை எச்சரித்துவிட்டு அங்கிருந்து சென்றனர். குடிபோதையில் பெண் ஒருவர் அவசர போலீஸ் உதவி எண்ணுக்கு அழைத்து தமிழக வெற்றிக் கழகத்தில் எம்.எல்.ஏ. சீட் தர நடவடிக்கை எடுக்க கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

