ரெயில்முன் பாய்ந்து மாற்றுத்திறனாளி மகள்களுடன் பெண் தற்கொலை

திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சி சென்ற இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பு பாய்ந்து இந்த 3 பெண்களும் தற்கொலை செய்திருக்கலாம் என தெரியவந்தது.
விருதுநகர்,
விருதுநகர் அருகே பட்டம்புதூர் தண்டவாளத்தில் நேற்று பிற்பகலில் பெண்கள் உடல் சிதறி பலியாகிக்கிடப்பதாக விருதுநகர் ெரயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர். அங்கு அவர்கள் கண்ட காட்சி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருந்தது. எளிதில் அடையாளம் காண முடியாத வகையில் உடல்கள் துண்டாகி, ஆங்காங்கே தூக்கி வீசப்பட்டு கிடந்தன. அவற்றை ரெயில்வே போலீசார் சேகரித்த நிலையில், இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து அப்பகுதியை சேர்ந்த பலர் அங்கு திரண்டனர்.
திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சி சென்ற இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பு பாய்ந்து இந்த 3 பெண்களும் தற்கொலை செய்திருக்கலாம் என தெரியவந்தது.
3 பெண்களின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அவர்களை பற்றிய விவரம் உடனடியாக தெரியவரவில்லை. தீவிர விசாரணைக்கு பின்னரே தெரியவந்தது.
பட்டம்புதூர் காலனியை சேர்ந்தவர் தர்மர். இவருடைய மனைவி ராஜவள்ளி (வயது 60). இவர் சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இவர்களுடைய மகள்கள் மாரியம்மாள் (30), முத்துமாரி (27), முத்துப்பேச்சி (25). இவர்களது குடும்பம் வறுமையில் இருந்ததால் மகள்களுக்கு திருமணம் செய்து வைக்க முடியவில்லையே என ராஜவள்ளி மிகவும் வருத்தப்பட்டு வந்தார். மேலும் மகள்கள் மாரியம்மாள், முத்துப்பேச்சி ஆகிய 2 பேரும் மாற்றுத்திறனாளிகள் ஆவர்.
இந்நிலையில் ராஜவள்ளி, அவருடைய மகள்கள் மாரியம்மாள், முத்துப்பேச்சி ஆகியோர், வறுமையால் தாங்கள் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை என்றும், அதனால் தற்கொலை ெசய்துகொள்ளும் விபரீத முடிவை எடுத்து பட்டம்புதூர் தண்டவாள பகுதிக்கு சென்றனர்.
அந்த வழியாக வந்த ரெயில்முன் பாய்ந்து 3 பேரும் உடல் சிதறி உயிரிழந்தது தெரியவந்தது. இதற்கிடையே வேலைக்கு சென்றுவிட்டு ராஜவள்ளியின் கணவர் தர்மர், மகள் முத்துமாரி ஆகியோர் வீடு திரும்பினர். அப்போது வீட்டில் தாய் மற்றும் சகோதரிகள் இல்லாததால் அவர்களை தேடினர். அப்போது, தண்டவாளத்தில் 3 பெண்கள் பலியாகி கிடப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு சென்று பார்த்தனர். இறந்தது ராஜவள்ளி, மாரியம்மாள், முத்துப்பேச்சி என தெரியவந்ததால் கதறி அழுதனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.






