பெண் தீக்குளித்து தற்கொலை; காப்பாற்ற முயன்ற வடமாநில தொழிலாளி காயம்

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து தனது குழந்தைகளுடன் தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூரில் வசித்து வந்தார்.
பெண் தீக்குளித்து தற்கொலை.
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் கணவரைப் பிரிந்து வசித்து வந்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரைப் போராடி மீட்க முயன்ற வடமாநில தொழிலாளி தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கணவருடன் கருத்து வேறுபாடு

ராமநாதபுரம் மாவட்டம், ராஜசூரியமடை பசும்பொன்நகரைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் மனைவி மாணிக்கவேல் (வயது 35). கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்த மாணிக்கவேல், தனது மகள் சசி(13), மகன் விஷால்(7) ஆகியோருடன் தனியாக வசித்து வந்தார்.

பெண் தீக்குளிப்பு

கடந்த சில மாதங்களாக தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூர் கீரைத்தோட்டத் தெருவில் குடியிருந்து வந்த அவர், அருகே எம்ப்ராய்டரி தொழில் செய்து வந்த வடமாநில தொழிலாளர்களுக்கு சமையல் செய்து கொடுத்து வந்தார். சம்பவத்தன்று மாலை பணி செய்யும் இடத்தில் உள்ள ஒரு அறையை உட்புறமாக பூட்டிக்கொண்ட மாணிக்கவேல், தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

காப்பாற்ற முயன்ற வடமாநில தொழிலாளி காயம்

அவரது அலறல் சத்தம் கேட்டு, பக்கத்து அறையில் வேலை செய்து கொண்டிருந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தொழிலாளி அல்டெப் நஸ்கர்ப்(31) என்பவர் கதவை உடைத்து உள்ளே சென்று அவரை மீட்கப் போராடியுள்ளார். இருப்பினும், மாணிக்கவேல் தீயில் கருகி உயிருக்குப் போராடிய நிலையில், அவரை காப்பாற்ற முயன்ற அல்டெப் நஸ்கர்ப்பிற்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.

பெண் உயிரிழப்பு

அங்கிருந்த சக தொழிலாளர்கள் 2 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணிக்கவேல், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

தாயின் உடலை பார்த்து அவரது குழந்தைகள் கதறி அழுத காட்சி அங்கே இருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது. காயமடைந்த வடமாநில தொழிலாளி அல்டெப் நஸ்கர்ப் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து புதியம்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com