

திருநெல்வேலி மாநகரம் தச்சநல்லூர் பகுதியை சேர்ந்த பேச்சியம்மாள் என்பவருக்கு புதுடில்லியைச் சேர்ந்த ரவீல்கான் என்பவர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர், உங்களது குழந்தைக்கு கல்வி உதவித்தொகை வந்துள்ளதாக கூறி நம்ப வைத்து பல்வேறு பண பரிவர்த்தனைகள் மூலம் சுமார் ரூ.80,562 பணத்தைப் பெற்றுக் கொண்டு அந்த பெண்ணை ஏமாற்றியுள்ளார்.
இதுகுறித்து அந்த பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் நெல்லை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் பொதுமக்கள் அனைத்துவகை இணையவழி குற்றங்கள் மற்றும் பண மோசடி நடைபெற்றால் உடனடியாக சைபர் கிரைம் இலவச உதவி எண்ணான 1930 அல்லது https://cybercrime.gov.in என்ற இணையதள முகவரியில் புகார் அளிக்க வேண்டும் என்று திருநெல்வேலி மாநகர காவல் துறை சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.