குற்றாலத்துக்கு சுற்றுலா வந்தபோது கணவரின் மடியில் மயங்கி விழுந்து இறந்த பெண்

உறவினர்களுடன் தம்பதி குற்றாலத்துக்கு சுற்றுலா சென்றனர்.
தென்காசி,
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராமநாதன். இவருடைய மனைவி தெய்வானை (வயது 65). இவர்கள் தங்களுடைய உறவினர்களுடன் நேற்று முன்தினம் வேனில் குற்றாலத்துக்கு சுற்றுலா வந்தனர். அவர்கள் இரவில் குற்றாலம் மெயின் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
பின்னர் ராமநாதன்- தெய்வானை தம்பதியர் அருவிக்கரையின் ஓரமாக அமர்ந்து சுவாரசியமாக பேசிக்கொண்டிருந்தனர். அப்போது தெய்வானைக்கு திடீரென்று மயக்கம் ஏற்பட்டதால், கணவர் ராமநாதன் மடியில் சரிந்து விழுந்தார். உடனே ராமநாதன் கூச்சலிட்டார்.
தொடர்ந்து உறவினர்களுடன் சேர்ந்து தெய்வானையை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு தெய்வானையை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றாலத்துக்கு சுற்றுலா வந்த இடத்தில் கணவரின் மடியில் மனைவி மயங்கி விழுந்து இறந்ததால் உறவினர்கள் சோகத்தில் மூழ்கினர்.






