திண்டுக்கல்லில் பைக் டயரில் சேலை சிக்கி பெண் பலி: மகன் கண்முன்னே நேர்ந்த சோகம்

சிகிச்சையில் இருந்த கணவருக்கு உணவு கொண்டு சென்ற பெண் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
திண்டுக்கல்லில் பைக் டயரில் சேலை சிக்கி பெண் பலி: மகன் கண்முன்னே நேர்ந்த சோகம்
Published on

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் சித்தையன்கோட்டை பேரூராட்சிக்குட்பட்ட சேடப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் லலித் (45). உடல்நலக்குறைவு காரணமாக அவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

டயரில் சேலை சிக்கி பலி

இந்நிலையில், அவரது மனைவி கிருஷ்ணவேணி (40), தனது மகனுடன் இருசக்கர வாகனத்தில் கணவருக்கு உணவு கொண்டு செல்வதற்காக திண்டுக்கல்–வத்தலகுண்டு சாலையில் சென்றார். வக்கம்பட்டி அருகே சென்றபோது, எதிர்பாராத விதமாக கிருஷ்ணவேணி அணிந்திருந்த புடவை பைக்கின் டயரில் சிக்கியது.

இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த கிருஷ்ணவேணி தலையில் பலத்த காயமடைந்தார். சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். திடீரென ஏற்பட்ட விபத்தில், மகன் கண்முன்னே தாய் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

சோகம்

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த திண்டுக்கல் தாலுகா காவல்துறையினர், கிருஷ்ணவேணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கணவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவருக்கு உணவு கொண்டு செல்லும் வழியிலேயே மனைவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com