விஷம் குடித்து விட்டு டிக்-டாக்கில் வீடியோ வெளியிட்ட பெண் சாவு : கணவர் கண்டித்ததால் விபரீத முடிவு

கணவர் கண்டித்ததால் விஷம் குடித்து விட்டு டிக்-டாக்கில் வீடியோ வெளியிட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விஷம் குடித்து விட்டு டிக்-டாக்கில் வீடியோ வெளியிட்ட பெண் சாவு : கணவர் கண்டித்ததால் விபரீத முடிவு
Published on

பெரம்பலூர்,

முகநூல் (பேஸ்புக்), வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம் போலவே டிக்-டாக் என்ற பெயரில் புதிய செல்போன் செயலி அறிமுகமாகி உள்ளது. ஏற்கனவே இருக்கிற வீடியோவிற்கு ஏதுவாக வாயசைத்தோ அல்லது நடித்தோ வீடியோவாக மாற்றி நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளுகிற டிக்-டாக் செயலி கிட்டத்தட்ட ஸ்மார்ட் செல்போன் வைத்திருக்கும் அனைவரின் செயலிகளுடன் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும்.

இதற்கு இளைஞர்கள் மட்டுமின்றி குடும்ப பெண்களும் அடிமையாகி விட்டார்கள் என்றே கூறலாம். இதற்கு ஒருபுறம் பாராட்டுகள் குவிந்தாலும், மறுபுறம் டிக்-டாக் செயலி கலாசார சீர்கேட்டிற்கு வழிவகுப்பதோடு கண்டனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. சமூக சீரழிவுக்கு டிக்-டாக் வீடியோக்கள் வழி வகுப்பதாகவும், இந்த செயலியை பயன்படுத்தியவர்கள் சிலர் தற்கொலையும் செய்து கொண்டுள்ளனர் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த செயலிக்கு மதுரை ஐகோர்ட்டு தடை விதித்தது. ஆனால், இந்த தடையை சுப்ரீம் கோர்ட்டு விலக்கியது.

இந்நிலையில் டிக்-டாக் செயலிக்கு பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு குடும்ப பெண் அடிமையாகி விஷம் குடித்து தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்த விவரம் வருமாறு:-

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள வங்காரம் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகள் அனிதா (வயது 24). பட்டதாரியான இவருக்கும், பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா சீராநத்தம் கிராமத்தை சேர்ந்த பழனிவேல் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 5 வயதில் ஒரு மகளும், 3 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

பழனிவேல், சிங்கப்பூரில் கூலி வேலை பார்த்து வருவதால் கணவர் ஊரான சீராநத்தத்தில் தனது 2 குழந்தைகளுடன் அனிதா தனியாக வசித்து வந்தார். வெளிநாட்டில் இருந்து கணவர் அனுப்பும் பணத்தில் குடும்பம் நடத்தி வந்த அனிதாவின் வாழ்க்கையில் எமனாக டிக்-டாக் செயலி எட்டி பார்த்தது. அந்த செயலியை தனது செல்போனில் பதிவிறக்கம் செய்த அனிதா பின்னர் அதிலேயே மூழ்கி போனார்.

இதனை பார்த்த உறவினர்கள், அனிதாவின் செயல்பாடு குறித்து சிங்கப்பூரில் இருக்கும் கணவரிடம் தெரிவித்தனர். அவர், தனது மனைவியை அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்டு கண்டித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்த மகள் மோனிகா கீழே விழுந்து காயம் அடைந்தார்.

காயமடைந்த மகளை கூட சரிவர கவனிக்காமல் டிக்-டாக் செயலில் அனிதா மூழ்கி இருந்ததாகவும், இதுகுறித்து தகவல் அறிந்த பழனிவேல் ஆத்திரத்தில் மனைவி அனிதாவை செல்போனில் தொடர்பு கொண்டு கடுமையாக திட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதனால், மனம் உடைந்த அனிதா தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார். இதையடுத்து கடந்த 10-ந் தேதி வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) எடுத்து குடித்தார். அதனை தனது கடைசி விருப்பமாக டிக்-டாக் செயலி மூலம் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் பூச்சிக்கொல்லி மருந்தை முதலில் குடிக்கும் அவர், பின்னர் தண்ணீரை குடிக்கிறார். அடுத்த சில வினாடியில் வாந்தி எடுக்கிறார், மறுபடியும் தண்ணீர் குடிக்கிறார், வாந்தி எடுக்கிறார்.

அடுத்த சில வினாடிகளில், அவரது கண்கள் மயக்க நிலையை அடைகிறது. பின்னர் வாயை துடைத்து விட்டு, சிரித்தவாறு அந்த வீடியோவை டிக்-டாக் செயலில் பதிவிடுகிறார். இவ்வாறு அந்த வீடியோ சுமார் 43 வினாடிகள் ஓடுகிறது.

இதுகுறித்து தகவலறிந்த அருகில் இருந்தவர்கள் அனிதாவை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையிலும், அதனை தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

அனிதா விஷம் குடித்த தகவல் அறிந்து கணவர் பழனிவேலு சிங்கப்பூரில் இருந்து நேற்று முன்தினம் சொந்த ஊர் வந்தார். இதுதொடர்பாக அனிதாவின் தாய் தங்கமணி கொடுத்த புகாரின்பேரில், குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

200-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் பதிவு

உயிரிழந்த அனிதா, டிக்-டாக் செயலி மூலம் நடனமாடுவது, பாடல் பாடுவது, அலங்காரம் செய்து கொண்டு தன்னை அழகாக காட்டுவது போன்றவை உள்பட 200-க்கும் மேற்பட்ட வீடியோக்களை எடுத்து பதிவிட்டுள்ளார். அதற்கு விருப்பம் (லைக்) அள்ளி குவித்து வந்தார். தனது சந்தோஷத்தை டிக்-டாக்கில் பகிர்ந்து வந்த அனிதா, இறுதியில் தான் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வதையும் அதே டிக்-டாக்கில் பதிவிட்டார். இந்த சம்பவம் அவரை பின் தொடர்ந்தவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com