

தூத்துக்குடி,
தூத்துக்குடி அண்ணா நகர் 12-ஆவது தெரு, மங்களபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பூபால் ராஜா. ஆட்டோ ஓட்டுநரான இவர், தனது மனைவி அமுதா (50) உடன் வீட்டின் முன்பாக பழைய இரும்பு மற்றும் மளிகைக் கடை நடத்தி வந்தார். இவர்களது மகன் அருண்குமார், தனது மனைவி சரஸ்வதி (29) மற்றும் குழந்தைகளுடன் அதே பகுதியில் தனியாக வசித்து வந்துள்ளார்.
அருண்குமார் மது போதையில் அடிக்கடி குடும்பத் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு அருண்குமாருக்கும், அவரது மனைவி சரஸ்வதிக்கும் இடையே மீண்டும் கடுமையான தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு வந்த அமுதா, தனது மகனுக்கு ஆதரவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மருமகள் தரப்பினருக்கு ஆத்திரம் ஏற்பட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில், நேற்று வழக்கம் போல் அமுதா தனது மளிகைக் கடையில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் திடீரென அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.
பலத்த காயமடைந்த அமுதாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், அருண்குமாரின் மனைவி சரஸ்வதியின் சகோதரரான சங்கர் (32) என்பவருக்கு சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீசார், சங்கர் மற்றும் அவரது நண்பர் மதன் ஆகிய 2 பேரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.