ராயக்கோட்டை அருகே பஸ் கவிழ்ந்து பெண் பலி; 20 பேர் படுகாயம்

தேன்கனிக்கோட்டையில் இருந்து தனியார் பஸ் ஒன்று கெலமங்கலம் வழியாக கிருஷ்ணகிரி நோக்கி சென்று கொண்டு இருந்தது.
ராயக்கோட்டை அருகே பஸ் கவிழ்ந்து பெண் பலி;
20 பேர் படுகாயம்
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் இருந்து தனியார் பஸ் ஒன்று கெலமங்கலம் வழியாக கிருஷ்ணகிரி நோக்கி சென்று கொண்டு இருந்தது. இந்த பஸ்சில் 30-க்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்துள்ளனர். பஸ்சை டிரைவர் ஸ்ரீதர் (வயது 28) என்பவர் ஓட்டி வந்தார். கெலமங்கலம் அடுத்துள்ள உள்ளுக்குறுக்கை பகுதியில் அரசு மாணவிகள் தங்கும் விடுதி முன்பு பஸ் சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் இடிபாடுகளுக்குள் சிக்கினர். இதில் 21 பேர் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவர்களை மீட்டு ஒசூர்,கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே விபத்தில் சிக்கிய ராயக்கோட்டை பாஞ்சாலி நகரை சேர்ந்த ராணி (60) சம்பவ இடத்திலேயே இடிபாடுகளுக்குள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். ராயக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி, மற்றும் போலீசார், ராணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சாலையில் கவிழ்ந்து கிடந்த பஸ்சை கிரேன் மூலம் அப்புறப்படுத்தினர். இந்த விபத்தால் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அதனால் ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பை போலீசார் சரிசெய்தனர். விபத்து குறித்து ராயக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com