கழுத்தை நெரித்து பெண் கொலை

வாணியம்பாடி அருகே விறகு சேகரிக்க சென்ற பெண்ணை மர்ம நபர்கள் கழுத்தை நெரித்து கொலை செய்து, நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
கழுத்தை நெரித்து பெண் கொலை
Published on

விறகு சேகரிக்க

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள துருஞ்சிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 55), கூலித்தொழிலாளி. இவரது மனைவி மங்கம்மாள் (51). இவர் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை பார்த்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் 100 நாள் வேலைக்கு சென்று விட்டு மதியம் வீடு திரும்பியுள்ளார். பின்னர் சமைப்பதற்கு தேவையான விறகு சேகரிப்பதற்காக அருகில் உள்ள காப்பு காட்டு பகுதிக்கு சென்றுள்ளார். இரவு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

பெண் பிணம்

இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் மங்கம்மாளை கண்டு பிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் நேற்று பிற்பகல் காட்டு பகுதி வழியாக சென்ற நபர் ஒருவர், காட்டில் பெண் ஒருவர் இறந்து கிடப்பதாக ஆலங்காயம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டார்.

கழுத்தை நெரித்து கொலை

விசாரணையில் இறந்து கிடந்தது மங்கம்மாள் என்பது தெரிய வந்தது. அவர் காதில் அணிந்திருந்த கம்மல், தாலி மற்றும் செல்போன் காணாமல் போய் இருந்தது.

அவரை மர்ம நபர்கள் கழுத்தை நெரித்து கொலைசெய்து நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து ஆலங்காயம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com