

விருதுநகர் நான்கு வழி சாலையில் கார் மோதியதில் தாய் பலியானார். மகள் படுகாயம் அடைந்தார்.
கல்லூரி மாணவி
விருதுநகர் லட்சுமி நகர் பாண்டியன் தெருவை சேர்ந்தவர் முகமது அப்துல் காதர் (வயது 51). இவரது மனைவி சந்தா பானு (45). இவர்களது மகள் ரிஸ்வானா (19). இவர் இந்நகரில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரியில் 2-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். இந்நிலையில் தாயும், மகளும் மதுரையில் பொருட்கள் வாங்குவதற்காக சென்றிருந்தனர்.
மதுரையில் இருந்து நள்ளிரவு வீடு திரும்பினர். முகமது அப்துல் காதர், தனது மனைவி மற்றும் மகளை அழைத்துச் செல்வதற்காக விருதுநகர் போக்குவரத்து கழக பணிமனை எதிரே உள்ள பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தார். சந்தா பானுவும், ரிஸ்வானாவும் மதுரையில் இருந்து பஸ்சில் நள்ளிரவு வீடு திரும்பினர்.
பெண் பலி
பஸ்சில் இருந்து இறங்கி இருவரும் நான்கு வழி சாலையை கடந்தனர். அப்போது மதுரையில் இருந்து சிவகாசிக்கு சென்ற கார் அவர்கள் மீது மோதியது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த முகமது அப்துல் காதர் உடனடியாக அங்கிருந்தவர்கள் உதவியுடன் படுகாயம் அடைந்த 2 பேரையும் ஆம்புலன்சில் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.
ஆனால் சந்தா பானுவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ரிஸ்வானா சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுபற்றி முகம்மது அப்துல் காதர் கொடுத்த புகாரின் பேரில் பாண்டியன் நகர் போலீசார் காரை ஓட்டி வந்த சிவகாசி ஸ்டேட் பாங்க் காலனியைச் சேர்ந்த நெடுஞ்செழியன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.