தனது அறையில் முதல்-அமைச்சர் விஜய் படத்தை வைக்க பெண் மேயர் மறுப்பு: கோவையில் பரபரப்பு

அனைத்து அரசுத்துறை அலுவலகங்களிலும் முதல்-அமைச்சர் விஜய் புகைப்படம் வைக்கப்பட்டு வருகின்றன.
தனது அறையில் முதல்-அமைச்சர் விஜய் படத்தை வைக்க பெண் மேயர் மறுப்பு: கோவையில் பரபரப்பு
Published on

கோவை,

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுத் துறை அலுவலகங்களிலும் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் படத்தை வைப்பதற்கு, அதிகாரப்பூர்வமான புகைப்படம் ஒன்றை செய்தி - மக்கள் தொடர்பு துறை தேர்வு செய்து வெளியிட்டுள்ளது. இந்தப் படம் பிரேம் செய்யப்பட்டு, அனைத்து அரசுத்துறை அலுவலகங்களிலும் வைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கோவை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கமிஷனர், துணை கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் கூட்ட அரங்குகளில் முதல்-அமைச்சர் விஜய் படம் மாட்டப்பட்டது. இதேபோல், மேயர், துணை மேயர், நிலைக்குழு தலைவர்கள் மற்றும் மண்டலக் குழு தலைவர்கள் அறையிலும் முதல்-அமைச்சர் விஜய் படம் மாட்டப்பட வேண்டும். இவர்கள் அனைவரும் தி.மு.க.வை சேர்ந்தவர்கள் என்றாலும், இதில் துணை மேயர் வெற்றிச் செல்வன் தன் அறையில் முதல்-அமைச்சர் புகைப்படத்தை வைப்பதற்கு எந்தவித ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை.

ஆனால், மேயர் ரங்கநாயகி, அவரது அறையில் முதல்-அமைச்சர் விஜய் படத்தை வைப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். அதே நேரம், மேயர் அறைக்குள் முன்னாள் முதல்-அமைச்சர்கள் கருணாநிதி, மு.க.ஸ்டாலின், முன்னாள் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, செந்தில்பாலாஜி ஆகியோரின் படங்கள் வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மேயர் ரங்கநாயகி கூறும்போது, "எனக்கு ஒதுக்கிய அறையில் மாட்டப்பட்டுள்ள எங்கள் கட்சி தலைவர்கள் படங்களை எடுக்க முடியாது. அவர்களை பார்த்தால் புத்துணர்ச்சி கிடைக்கும். முதல்-அமைச்சரின் புகைப்படத்தை அறைக்கு முன் வைத்திருக்கிறோம். 2027-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை எனது பதவிக்காலம் இருக்கிறது. அதுவரை என் அறைக்குள் முதல்-அமைச்சர் விஜய்யின் படத்தை வைக்கமாட்டேன்" என்று தெரிவித்தார்.

இதேபோல், மண்டலக் குழு தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள் அறைகளிலும் முதல்-அமைச்சர் விஜய்யின் புகைப்படத்தை வைக்க ஆட்சேபனை தெரிவித்ததால், கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com