

திருவள்ளூர்,
ஊத்துக்கோட்டை அருகே காப்புக்காடு பகுதியில், கள்ளக்காதல் விவகாரத்தில் இளம்பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்த காதலனை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள செங்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் மணிமேகலை (24 வயது). இவருக்கும் ஆந்திர மாநிலம், காரூர் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில், மணிமேகலைக்கும், காரூர் பகுதியில் வசித்து வரும் துர்கா பிரசாத் (28 வயது) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளாக பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இதனை அறிந்த மணிமேகலையின் கணவர் அவரை கண்டித்துள்ளார். இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த மணிமேகலை, செங்கரை பகுதியில் குடியேறினார். மேலும், தேர்வாய்கண்டிகை சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இதற்கிடையே, துர்கா பிரசாத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்த மணிமேகலை, கடந்த 3 மாதங்களாக அவரிடம் சரிவர செல்போனில் பேசவில்லை என கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த துர்கா பிரசாத், நேற்று மதியம் மணிமேகலை வேலை பார்த்து வந்த தனியார் நிறுவனத்துக்கு நேரில் சென்றார்.
அப்போது, அங்கு பணியாற்றும் மேற்பார்வையாளர் ஒருவருடன் மணிமேகலைக்கு பழக்கம் ஏற்பட்டிருப்பதும், இதனால் தன்னை விட்டு விலகியிருப்பதும் அவருக்கு தெரிய வந்தது. மேலும், மேற்பார்வையாளருடன் மணிமேகலை சிரித்து பேசுவதை நேரில் பார்த்த துர்கா பிரசாத் ஆத்திரமடைந்தார். இதனால் மணிமேகலையை கொலை செய்ய அவர் திட்டமிட்டுள்ளார்.
இதையடுத்து, மணிமேகலையிடம் உல்லாசமாக இருக்கலாம் என்று கூறி துர்கா பிரசாத் அழைத்துள்ளார். இதனை நம்பிய மணிமேகலை, அவருடன் பைக்கில் சென்றார். ஊத்துக்கோட்டை அருகே பெண்ணாலூர்பேட்டையை அடுத்த சென்றான்பாளையம் காப்புக்காடு பகுதிக்கு சென்ற இருவரும் தனியாக இருந்தனர். அப்போது துர்கா பிரசாத், மறைத்து வைத்திருந்த கத்தியால் மணிமேகலையின் முகத்தில் சரமாரியாக வெட்டினார். இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த அவரின் கழுத்தையும் அறுத்து கொலை செய்துவிட்டு, பைக்கில் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இதற்கிடையே, அந்த வழியாக சென்ற பொதுமக்கள் ரத்த வெள்ளத்தில் பெண் ஒருவர் பிணமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து பெண்ணாலூர்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், மணிமேகலையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், கள்ளக்காதல் விவகாரத்தில் மணிமேகலை கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து, இன்று காலை துர்கா பிரசாத்தை போலீசார் கைது செய்தனர். இந்த கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.