வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் துப்பாக்கி முனையில் நகைகள் கொள்ளை - 2 பேர் கைது

வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் துப்பாக்கி முனையில் நகையை கொள்ளையடித்த வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

நாமக்கல்,

பெண்ணிடம் நகை பறிப்பு

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பட்டணம் அம்மன் கோவில் காடு பகுதியை சேர்ந்தவர் கலைச்செல்வி (58 வயது). இவர் கடந்த 11-ந்தேதி இரவு 8.30 மணி அளவில் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது முகமூடி அணிந்து 2 பேர் பைக்கில் வந்தனர். அவர்கள் கத்தி, துப்பாக்கியை காட்டி மிரட்டி கலைச்செல்வி அணிந்திருந்த 16 பவுன் நகைகள், ரூ.20 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர்.

இதுகுறித்து ராசிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் கொள்ளை வழக்கில் துப்பு துலங்க 5 தனிப்படைகளை அமைத்து மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.ரம்யா பாரதி உத்தரவிட்டார். அவர்கள் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

கொள்ளையடிக்க திட்டம்

இதுதொடர்பாக ராசிபுரம் அருகே முருங்கப்பட்டியை சேர்ந்த ராஜகுகன் (22 வயது) என்பவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில் வெளியான பரபரப்பு தகவல்கள் வருமாறு:-

ராஜகுகன், கலைச்செல்வியின் மருமகன் நடத்தி வந்த செங்கல் சூளை அலுவலகத்தில் கடந்த ஆண்டு வேலை செய்து வந்தார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 8 மாதங்களுக்கு முன்பு வேலையில் இருந்து அவர் நின்று விட்டார்.

ராஜகுகனின் அக்கா தனுசியாவின் கணவர் அஜித்குமார் (29 வயது). இவர் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள எடையப்பட்டி என்ற பகுதியில் வசித்து வந்தார். இந்த நிலையில், அஜித்குமார் தன்னை ராஜகுகன் வேலை செய்து வந்த செங்கல் சூளை அலுவலகத்தில் சேர்த்து விடுமாறு கூறினார். இதையடுத்து வேலை கேட்பதற்காக இருவரும் கலைச்செல்வி வீட்டிற்கு வந்தனர். அந்த நேரம் அவர் வீட்டில் தனியாக இருப்பதையும், வீட்டில் கண்காணிப்பு கேமராக்கள் எதுவும் இல்லை என்பதையும் அறிந்த அவர்கள் அந்த வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்டனர்.

நகைகள் மீட்பு

இதையடுத்து கடந்த 11-ந்தேதி இரவு பைக்கில் அங்கு வந்த இருவரும் துப்பாக்கி, கத்தியை காட்டி மிரட்டி நகை, பணத்தை பறித்து சென்றது தெரிய வந்தது. இதையடுத்து ராஜகுகன், அவரது அக்கா கணவர் அஜித்குமார் ஆகிய இருவரையும் ராசிபுரம் போலீசார் கைது செய்தனர். மேலும், கலைச்செல்வியிடம் இருந்து அவர்கள் 9 பவுன் நகை மட்டுமே பறித்து சென்றதும், அவர் பதற்றத்தில் தவறுதலாக 16 பவுன் என கூறியதும் தெரிய வந்தது.

கைதான 2 பேரிடம் இருந்தும், 9 பவுன் நகைகள் மீட்கப்பட்டன. கொள்ளையடிக்க பயன்படுத்திய பைக், ஒரு கத்தி, ஒரு துப்பாக்கி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com