

தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகேயுள்ள குரங்கணி தெற்கு தெருவை சேர்ந்தவர் சத்தியகலா (வயது 45). இவரது கணவர் கடந்த 2015-ம் ஆண்டு உயிரிழந்த நிலையில், சத்தியகலா தனியாக வசித்து வந்தார். இவருக்கும் குலையன்கரிசலை சேர்ந்த செல்வகணேசன்(42) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அவ்வப்போது பல்வேறு இடங்களுக்குச் சென்று வருவது வழக்கம்.
கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 17-ம் தேதி, இருவரும் பல்வேறு கோவில்களுக்குச் சென்றுவிட்டு குரங்கன்தட்டு விலக்கு அருகே நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது செல்வகணேசன் திடீரென சத்தியகலாவிடம் பணம் கேட்டுள்ளார். அவர் பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த செல்வகணேசன், சத்தியகலாவின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியைப் பறித்ததோடு, மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரைக் குத்திவிட்டு தப்பிச் சென்றார்.
இந்தச் சம்பவம் குறித்து குரும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வகணேசனைக் கைது செய்தனர். கத்தியால் குத்தப்பட்ட சத்தியகலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்குப் பின் உயிர் தப்பினார். இந்த வழக்கின் விசாரணை ஸ்ரீவைகுண்டம் துணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி பர்ஷாத் பேகம், செல்வகணேசன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் கூடுதல் சிறை தண்டனை அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.