

தேனி,
கூடலூரில் குடும்ப பிரச்சினையில் பெண்ணை குத்திக் கொன்றுவிட்டு, தப்பி ஓடிய கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தேனி மாவட்டம், கூடலூர் கோட்டை கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் சிங்கத்துரை (47 வயது). லாரி டிரைவர். அவருடைய மனைவி பிரியங்கா (35 வயது). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
குடும்ப பிரச்சினை காரணமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சிங்கத்துரை தனது வீட்டின் மேல் தளத்தில் தனியாக வசித்து வந்தார். கீழ்தளத்தில் பிரியங்கா, தனது மகன், மகளுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்றிருந்த பிரியங்கா, இரவு 11 மணிக்கு மேல் தாமதமாக திரும்பி வந்துள்ளார். இதனை பார்த்த சிங்கத்துரை, “ஏன் இவ்வளவு நேரம்? எங்கே சென்றுவிட்டு வருகிறாய்?" என்று பிரியங்காவிடம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த சிங்கத்துரை, தனது மனைவியை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த பிரியங்கா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். அதன்பிறகு சிங்கத்துரை அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்களது மகனும், மகளும் கதறி அழுதனர். உடனடியாக இதுகுறித்து கூடலூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, பிரியங்காவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய சிங்கத்துரையை வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.