தொடர்ந்து தொல்லை கொடுத்த தொழிலாளி.. வெளிநாட்டில் இருக்கும் கணவருக்கு மெசேஜ் அனுப்பி விட்டு பெண் எடுத்த விபரீத முடிவு

என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். மகளை பார்த்துக் கொள்ளுங்கள் என உருக்கமாக தனது கணவருக்கு அந்த பெண் மேசேஜ் அனுப்பி உள்ளார்.
தொடர்ந்து தொல்லை கொடுத்த தொழிலாளி.. வெளிநாட்டில் இருக்கும் கணவருக்கு மெசேஜ் அனுப்பி விட்டு பெண் எடுத்த விபரீத முடிவு
Published on

குலசேகரம்,

குலசேகரம் அருகே வெளிநாட்டில் வசிக்கும் கணவருக்கு குறுந்தகவல் அனுப்பி விட்டு பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தகராறு செய்த தொழிலாளி

குமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள திருநந்திக்கரை மூலைப்பாகம் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் (வயது 40). இவர் துபாயில் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி அனிஷா (33). இந்த தம்பதிக்கு 1-ம் வகுப்பு படிக்கும் ஒரு பெண் குழந்தை உண்டு. பட்டதாரியான அனிஷா குலசேகரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

இந்தநிலையில் மகேஷ் சமீபத்தில் சொந்த ஊருக்கு வந்து விட்டு குடும்பத்தினரிடம் உற்சாகமாக பொழுதை கழித்தார். பிறகு கடந்த 20 நாட்களுக்கு முன்பு அவர் மீண்டும் துபாய்க்கு சென்றார். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் வீட்டில் இருந்த அனிஷாவிடம், ரப்பர் மரம் வெட்டும் தொழிலாளி ஒருவர் தகராறு செய்ததாக தெரிகிறது.

நான் இனி வாழ விரும்பவில்லை

இதனை தொடர்ந்து அனிஷா மனமுடைந்த நிலைக்கு சென்றார். நேற்று அதிகாலையில் செல்போன் மூலம் அனிஷா, வெளிநாட்டில் உள்ள கணவருக்கு மெசேஜ் ஒன்றை அனுப்பினார். அதில், நான் அவன் மேல் விருப்பப்பட்டு பழகியது கிடையாது. என்னால் இனி வாழ முடியாது. குழுவில் கட்ட வேண்டிய பணத்தை எனக்காக கட்டி விடுங்கள்.

நான் இனி வாழ விரும்பவில்லை. என்னை அவன் வாழ விடமாட்டான். என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். மகளை பார்த்துக் கொள்ளுங்கள் என உருக்கமாக அனுப்பியுள்ளார்.

இந்த குறுந்தகவலை சிறிது நேரம் கழித்து பார்த்த மகேஷ், அதிர்ச்சி அடைந்தார். உடனே தனது மனைவிக்கு செல்போனில் அழைத்துள்ளார். ஆனால் அவர் செல்போனை எடுக்கவில்லை. இதனை தொடர்ந்து தன்னுடைய தந்தையை தொடர்பு கொண்டு பதற்றத்துடன் நடந்த விவரத்தை கூறியுள்ளார்.

விபரீத முடிவு

இதையடுத்து மகேஷின் தந்தை, தன்னுடைய மற்றொரு மகனை அழைத்து கொண்டு அனிஷாவின் அறைக்கு சென்றுள்ளார். அங்கு கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. கதவை தட்டி பார்த்தபோது உள்ளே இருந்து எந்தவொரு சத்தமும் வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் உடனடியாக குலசேகரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த போலீசார் அறையின் கதவை உடைத்து பார்த்த போது, அங்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது அனிஷா தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். பின்னர் அனிஷா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து மகேஷின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பரபரப்பு தகவல்

போலீசார் நடத்திய விசாரணையில், ரப்பர் மரம் வெட்டும் தொழிலாளி ஒருவர், தன்னுடன் தொடர்ந்து பழக வேண்டும் என கூறி அனிஷாவுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்ததால் அவர் மனவேதனையில் இருந்துள்ளார். இதனால் தன்னுடைய கணவருக்கு குறுந்தகவல் அனுப்பி விட்டு அனிஷா உயிரை மாய்த்துக் கொண்டது அம்பலமானது. அனிஷாவுக்கு தொந்தரவு கொடுத்த தொழிலாளிக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த தொழிலாளியை தேடி போலீசார் விரைந்தனர். ஆனால் அவர் தலைமறைவாகி விட்டார். எனவே அவரை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com