நெல்லையில் பெண்ணை மிரட்டி ஆபாச படம் எடுத்து நகை, செல்போன் பறிப்பு - 3 பேர் கைது

கைதானவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகை மற்றும் குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
நெல்லையில் பெண்ணை மிரட்டி ஆபாச படம் எடுத்து நகை, செல்போன் பறிப்பு - 3 பேர் கைது
மணிகண்டன்,சிவா
Published on

திருநெல்வேலி,

நெல்லையில் பெண் ஒருவரை மர்ம கும்பல் காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று, அவரை பலவந்தமாக நிர்வாணமாக்கி செல்போனில் படம் பிடித்து, நகை மற்றும் செல்போனை கொள்ளையடித்த சம்பவம் மாவட்டத்தையே உலுக்கியுள்ளது.

காட்டுப்பகுதிக்கு கடத்தல்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாழையூத்து பகுதியை சேர்ந்த மணிகண்டன் மற்றும் அவரது நண்பர் சிவா ஆகியோர், 40 வயதுடைய பெண் ஒருவரை ஆள் நடமாட்டமில்லாத தனிமையான காட்டுப்பகுதிக்கு அழைத்து் சென்றனர். அங்கு வைத்து அந்தப் பெண்ணைச் சூழ்ந்து கொண்ட கும்பல், அவரை மிரட்டி ஆடை இன்றி நிர்வாணமாக்கியுள்ளது.

படம் பிடித்து மிரட்டல்

தொடர்ந்து, தங்களது செல்போன்கள் மூலம் அந்த பெண்ணை ஆபாசமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளனர். "நாங்கள் சொல்வதை கேட்காவிட்டால் இந்த ஆபாச படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு அசிங்கப்படுத்திவிடுவோம்" என அந்த பெண்ணை மிரட்டி, அவர் அணிந்திருந்த தங்க நகைகள் மற்றும் செல்போனை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

3 பேர் கைது

இந்த அதிர்ச்சி சம்பவத்தால் நிலைகுலைந்த அந்த பெண், இதுகுறித்து உடனடியாக போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் நெல்லை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில், பெண்ணை மிரட்டி ஆபாச படம் எடுத்து கொள்ளையடித்த கும்பலை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகை மற்றும் குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com