சிறப்பு டி.ஜி.பி.யால் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்ட பெண் எஸ்.பி.க்கே கொலை மிரட்டலா? மு.க.ஸ்டாலின் கண்டனம்

சிறப்பு டி.ஜி.பி.யால் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்ட பெண் எஸ்.பி.க்கே கொலை மிரட்டல் விடுவதா? என்று மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சிறப்பு டி.ஜி.பி.யால் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்ட பெண் எஸ்.பி.க்கே கொலை மிரட்டலா? மு.க.ஸ்டாலின் கண்டனம்
Published on

தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சிறப்பு டி.ஜி.பி.யால் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்ட பெண் எஸ்.பி.க்கே கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதற்குத் தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கொலை மிரட்டலைப் பார்த்துக் கொந்தளித்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் 10 பேர் தமிழகக் காவல்துறைத் தலைவரைச் சந்தித்துப் புகாரளித்த பிறகும், இந்த நிமிடம் வரை சிறப்பு டி.ஜி.பி.யையும், செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி.யையும் பாதுகாத்துக் கொண்டிருக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெண்ணினத்திற்கே சாபக்கேடாகிவிட்டார்.

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகும் இன்னும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சட்ட விரோத உத்தரவுகளை மதித்து பாலியல் தொந்தரவு கொடுத்தவரையும், புகார் கொடுக்க விடாமல் தடுத்தவரையும் தமிழகத் தலைமைச் செயலாளரும், உள்துறைச் செயலாளரும் காப்பாற்றிக் கொண்டிருப்பது மிகுந்த வேதனைக்குரியது; கண்டனத்திற்குரியது.

பாலியல் புகாருக்கு உள்ளானவர்களைப் பாதுகாப்பதும், பெண் எஸ்.பி.களுக்கே பாதுகாப்பற்றதும் தான் அ.தி.மு.க. ஆட்சியில் வெற்றி நடைபோடும் தமிழகம் என்ற பிரசாரத்தின் லட்சணமா?. பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்குத் தமிழகத் தாய்மார்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்பது மட்டும் நிச்சயம்.

ஆகவே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பிடியில் இருந்து தலைமைச் செயலாளரும், உள்துறை செயலாளரும் வெளியில் வந்து, பெண்ணினத்தின், அதிலும் ஒரு பெண் எஸ்.பி.யின் பாதுகாப்பிற்கே அச்சுறுத்தலாக உள்ள சிறப்பு டி.ஜி.பி. மற்றும் எஸ்.பி.யை உடனடியாக கைது செய்ய உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

ஒருவேளை தாமதித்தால், தேர்தல் ஆணையமே நேரடியாகத் தலையிட்டு இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com