கால் புண்ணுக்கு சிகிச்சை பெற்ற பெண் திடீர் உயிரிழப்பு - தனியார் மருத்துவமனைக்கு சீல்

டாக்டர் சரவணகுமார் ரஷியாவில் மருத்துவம் பயின்று தமிழகத்தில் பயிற்சி பெற்று மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்தது தெரிய வந்தது.
கால் புண்ணுக்கு சிகிச்சை பெற்ற பெண் திடீர் உயிரிழப்பு - தனியார் மருத்துவமனைக்கு சீல்
Published on

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே கால் புண்ணுக்கு சிகிச்சை பெற்ற பெண் திடீரென்று உயிரிழந்தார். அவர் தவறான சிகிச்சையால் இறந்ததாக கூறி உறவினர்கள் போலீசில் புகார் தெரிவித்தனர். இதையடுத்து அனுமதியின்றி நடத்தப்பட்ட தனியார் மருத்துவமனைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

பாவூர்சத்திரம் அருகே அடைக்கலபட்டணம் வேதம்புதூர் கீழத்தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவருடைய மனைவி சுப்பம்மாள் (67 வயது). ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்ட இவர் காலில் புண் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. எனவே அவர் நேற்று முன்தினம் சிகிச்சைக்காக பாவூர்சத்திரம் அருகே அடைக்கலப்பட்டணம் மெயின் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார்.

அந்த மருத்துவமனையில் டாக்டர் சரவணகுமார் (27 வயது) சுப்பம்மாளுக்கு சிகிச்சை அளித்தார். காலில் உள்ள புண்ணை சுத்தம் செய்து சிகிச்சை அளித்தபோது திடீரென்று சுப்பம்மாள் இறந்தார். இதனை அறிந்த சுப்பம்மாளின் உறவினர்கள், தவறான சிகிச்சையால்தான் அவர் உயிரிழந்ததாக கூறி பாவூர்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், இறந்த சுப்பம்மாளின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக சுகாதாரத்துறையின் இணை இயக்குனர் பிரேமலதா விசாரணை நடத்தினார். இதில், சரவணகுமார் ரஷிய நாட்டில் மருத்துவம் பயின்று தமிழகத்தில் பயிற்சி பெற்று மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்தது தெரிய வந்தது.

எனினும் அவர், தனியாக மருத்துவமனை தொடங்குவதற்கும், மருந்தகம் வைப்பதற்கும் அரசிடம் முறையான அனுமதி பெறவில்லை என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து மருத்துவமனைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com