

தேனி,
தேனி மாவட்டம், கூடலூர் அருகே லோயர்கேம்ப் முல்லைப் பெரியாற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை தீயணைப்புத் துறையினர் போராடி உயிருடன் மீட்டனர்.
தேனி மாவட்டம், கூடலூர் ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்தவர் சாந்தி (வயது 50). தோட்டத் தொழிலாளியான இவரது கணவர் ராசு ஏற்கெனவே இறந்துவிட்ட நிலையில், தனது 2 மகன்களுடன் வசித்து வருகிறார். மகன்கள் அடிக்கடி பணம் கேட்டுத் தொந்தரவு செய்து வந்ததால், சாந்தி கடந்த சில நாட்களாகக் கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று (வியாழக்கிழமை) மாலை சுமார் 6 மணியளவில் கூடலூர் அருகே லோயர்கேம்ப் அருகிலுள்ள குருவனூத்து பாலத்திற்குச் சென்ற சாந்தி, திடீரென அங்கிருந்து முல்லைப் பெரியாற்றில் குதித்தார். ஆற்றில் நீர்வரத்து இருந்ததால் அவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு தத்தளித்தார். அப்போது, பாலத்தின் அடியிலிருந்த மரத்தின் வேர் மற்றும் கிளையைப் பிடித்துக் கொண்டு உயிருக்குப் போராடியுள்ளார்.
இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து, உடனடியாக நீரில் இறங்கி அவர் அடித்துச் செல்லப்படாமல் பிடித்து நிறுத்தினர். மேலும், இதுகுறித்து கம்பம் தீயணைப்புத் துறை மற்றும் லோயர்கேம்ப் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கம்பம் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், பாலத்திலிருந்து கயிறு கட்டி ஆற்றில் இறங்கி சாந்தியைப் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர், அவர் சிகிச்சைக்காக கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து லோயர்கேம்ப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.