தனியாக சென்ற பெண்ணிடம் சில்மிஷம்... தட்டிக்கேட்ட கணவருக்கு கத்திக்குத்து

கோப்புப்படம்
சௌமியா கொடுத்த புகாரின் பேரில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம் சத்தரை கிராமத்தை அடுத்துள்ள பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சௌமியா (24 வயது). அவரும் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.
இருவரும் வெவ்வேறு இடங்களில் வேலை செய்து வந்ததால், சௌமியா தனியாக வேலைக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில் கடந்த 21-ம்தேதி சௌமியா வழக்கம்போல வேலைக்கு சென்றுவிட்டு மாலை வீடுதிரும்பி கொண்டிருந்தார். அப்போது சத்தரை கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த அருண் (எ) ராஜேஷ் (28 வயது) என்ற நபர் சௌமியாவை வழிமறித்துள்ளார்.
அவர் சௌமியா அணிந்திருந்த ஷாலை பிடித்து இழுத்து, தன்னுடன் வந்து தனிமையில் இருக்குமாறு அழைத்து தகாத முறையில் பேசியுள்ளார். மேலும் சௌமியாவின் கையை பிடித்து இழுத்து, தன்னுடன் பைக்கில் வருமாறு கட்டாயப்படுத்திய நிலையில், சௌமியா அங்கிருந்து தப்ப முயன்றுள்ளார். அப்போது சௌமியாவின் செல்போனை பறித்து கொண்டு அருண் அங்கிருந்து தப்பியுள்ளார்.
வீட்டுக்கு வந்த சௌமியா நடந்ததை தனது கணவர் ராஜ்குமாரிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜ்குமார், அருணிடம் சென்று தட்டிக் கேட்டுள்ளார். அப்போது, அருண் மற்றும் அவருடன் இருந்த அவரது நண்பர்கள் ராஜ்குமாரை அடித்து உதைத்து, கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதை கண்ட அப்பகுதி மக்கள் காயமடைந்த ராஜ்குமாரை மீட்டு கடம்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது தொடர்பாக சௌமியா கொடுத்த புகாரின் பேரில் அருண் மற்றும் அவரது நண்பர்கள் கோபி, கபிலன் மற்றும் மனோஜ் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள பாபு என்ற நபரை தேடி வருகின்றனர்.






