

தூத்துக்குடி,
தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகியாக இருந்த அஜிதா ஆக்னல், அந்த கட்சியிலிருந்து விலகி அண்மையில் தி.மு.க.வில் இணைந்த நிலையில், நேற்று தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்துப் பேசினார்.
கனிமொழி எம்.பி. முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்த அஜிதா ஆக்னல், நேற்று திருச்செந்தூர் அருகே உள்ள தண்டுபத்தில் உள்ள தி.மு.க. அலுவலகத்திற்கு வருகை தந்தார். அங்கு தமிழக அமைச்சரும், திருச்செந்தூர் தொகுதி தி.மு.க. வேட்பாளருமான அனிதா ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அஜிதா ஆக்னல் பேசியதாவது:
கடந்த 25 ஆண்டுகளாக விஜய்யின் மக்கள் இயக்கத்தில் பணியாற்றி வந்தேன். கடந்த 2 ஆண்டுகளாக கட்சிக்காக முழுமையாக உழைத்தேன். ஆனால், விஜய் என்னை ஒருமுறை கூட சந்திக்கவில்லை. த.வெ.க.வில் பெண்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படுவதில்லை. தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட எனக்கு வாய்ப்பு வழங்காமல், விஜய் தனது நண்பரான நடிகர் ஸ்ரீநாத்துக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்.
தவறு செய்துவிட்டு மாற்று கட்சியிலிருந்து வந்தவர்களுக்கும், குற்றப் பின்னணி உள்ளவர்களுக்கும் மட்டுமே த.வெ.க.வில் சீட் வழங்கப்பட்டுள்ளது. சீட்டுக்காக கெஞ்சிக் கூத்தாடியும் எனக்கு வாய்ப்பு தரவில்லை.
தி.மு.க.வில் பெண்களுக்கு உரிய மரியாதை இருக்கிறது. அதனால் தான் நான் இந்த இயக்கத்தில் இணைந்தேன். பெற்ற பிள்ளைகளுக்கே கடன் கொடுத்தேன் என்று சொல்லும் ஒரே தலைவர் விஜய் தான் என அவர் சாடினார். முன்னாள் மக்கள் இயக்க நிர்வாகி ஒருவரே விஜய்யை கடுமையாக விமர்சித்துப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.