குடிநீர் வராததை கண்டித்து நகராட்சி அலுவலகத்தை காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகை விழுப்புரத்தில் பரபரப்பு

குடிநீர் வராததை கண்டித்து விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தை காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
குடிநீர் வராததை கண்டித்து நகராட்சி அலுவலகத்தை காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகை விழுப்புரத்தில் பரபரப்பு
Published on

மின் மோட்டார் பழுது

விழுப்புரம் பெரியகாலனி நந்தனார் தெருவில் நகராட்சி சார்பில் சிறிய அளவிலான குடிநீர் தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் மின் மோட்டார் பழுது காரணமாக அந்த குடிநீர் தொட்டியில் தண்ணீரை ஏற்ற முடியாமல் கடந்த 5 நாட்களாக அப்பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.

இதன் காரணமாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் மிகவும் அவதிப்பட்டனர். இதனால் அவர்கள் பழைய பஸ் நிலையம் அல்லது நகராட்சி அலுவலகம் அருகில் உள்ள குடிநீர் குழாய்க்கு சென்று தண்ணீர் பிடித்து வரும் நிலைமைக்கு தள்ளப்பட்டனர். இதுபற்றி அப்பகுதி பொதுமக்கள், பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

முற்றுகை

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த பெண்கள், நேற்று காலை காலி குடங்களுடன் நகராட்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்து அங்குள்ள நுழைவுவாயிலை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர். அப்போது மின் மோட்டார் பழுதை சரிசெய்து தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கும்படி அவர்கள் கோஷம் எழுப்பினர்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் நகராட்சி அதிகாரிகள், விழுப்புரம் மேற்கு போலீசார் அங்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மின் மோட்டார் பழுதை உடனடியாக சரிசெய்து குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன்பேரில் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த திடீர் போராட்டத்தினால் நகராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com