புழல் அருகே அடிப்படை வசதிகள் கேட்டு பெண்கள் சாலை மறியல்; போக்குவரத்து பாதிப்பு

புழல் அருகே அடிப்படை வசதிகள் கேட்டு பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
புழல் அருகே அடிப்படை வசதிகள் கேட்டு பெண்கள் சாலை மறியல்; போக்குவரத்து பாதிப்பு
Published on

அடிப்படை வசதி

சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலத்துக்கு உட்பட்ட 30-வது வார்டு விநாயகபுரத்தை அடுத்த திருமால் நகரில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நகரில் குடிநீர் வசதியும், கழிவுநீர் வெளியேற கால்வாய் வசதியும் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

தங்களுக்கு குடிநீர், கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மண்டல அதிகாரிகளிடம் பொதுமக்கள் தரப்பில் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

சாலை மறியல்

இதனால் ஆத்திரம் அடைந்த திருமால் நகரைச் சேர்ந்த திரளான பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள், நேற்று செங்குன்றம்-பெரம்பூர் சாலையில் விநாயகபுரம் அருகே திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த புழல் உதவி கமிஷனர் ஆதிமூலம் தலைமையிலான போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். அதை ஏற்று சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com