

சேலம்,
கூட்டுறவுத்துறை சார்பில் பெண்களின் கனவுகளை நனவாக்கும் வகையில் அவர்கள் பொருளாதாரத்தில் உயர வழிவகுக்கும் சிங்கப்பெண் கடன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் சுயதொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
குடும்பத்தின் ஆணிவேராக திகழும் பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், தன்னம்பிக்கை மிக்க தொழில் முனைவோராக உயர்த்தவும் கூட்டுறவுத்துறை மகத்தான பங்காற்றி வருகிறது. சிங்கப்பெண் கடன் திட்டத்தின் மூலம் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள், கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், தொழில் முனைவோர்கள், பணிபுரியும் மகளிர் ஆகியோர் கடனுதவி பெற்று பயனடையலாம்.
கந்துவட்டி பிடியிலிருந்து மக்களை மீட்டு பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. புதிய சுயதொழில் தொடங்க விரும்புவோரும், ஏற்கனவே செய்து வரும் தொழிலை விரிவுப்படுத்த விரும்பும் பெண்களும் தங்களுக்கு அருகில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை நேரில் அணுகி கடனுதவி பெற்று பயன் அடையலாம். அவ்வாறு நடப்பாண்டில் இந்த மாதம் வரை 41 ஆயிரத்து 369 பயனாளிகளுக்கு ரூ.3,428.49 கோடி அளவில் கடன்கள் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.