பொக்லைன் எந்திரத்தை முற்றுகையிட்டு தரையில் படுத்து பெண்கள் போராட்டம்

கலசபாக்கம் அருகே நீர்ப்பிடிப்பு பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை இடிக்க வந்த பாக்லைன் எந்திரத்தை முற்றுகையிட்டு தரையில் படுத்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொக்லைன் எந்திரத்தை முற்றுகையிட்டு தரையில் படுத்து பெண்கள் போராட்டம்
Published on

கலசபாக்கம்

கலசபாக்கம் அருகே நீர்ப்பிடிப்பு பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை இடிக்க வந்த பாக்லைன் எந்திரத்தை முற்றுகையிட்டு தரையில் படுத்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆக்கிரமிப்பு

கலசபாக்கம் அருகே நார்த்தாம்பூண்டி கிராமத்தில் அண்ணா நகர் பகுதியில் 41 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் சுமார் 50 வருடங்களாக வீடு கட்டி வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அதே ஊராட்சியை சேர்ந்த சரவணன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து வீடு கட்டி வருவதாக வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இதனை விசாரித்த ஐகோர்ட்டு நீர்நிலை பகுதிகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 41 வீடுகளையும் இடிக்குமாறு உத்தரவிட்டது.

இதனையடுத்து வீட்டு உரிமையாளர்களுக்கு வீடுகளை அகற்றுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும் கால அவகாசமும் வழங்கப்பட்டன.

ஆனால் இதுவரை வீடுகளை அகற்றப்படாததால் ஐகோர்ட்டு உத்தரவின் படி திருவண்ணாமலை உதவி கலெக்டர் மந்தாகினி முன்னிலையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரங்கள் மூலம் வீடுகளை இடிக்க வந்தனர்.

தரையில் படுத்து போராட்டம்

அப்போது வீடுகளில் வசித்து வருபவர்கள் தங்கள் குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன், வீடுகளை இடிக்க வந்த பொக்லைன் எந்திரத்தை முற்றுகையிட்டனர். பின்னர் பெண்கள் பொக்லைன் எந்திரம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

ஒரு கட்டத்தில் அவர்கள் தரையில் படுத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் கூறுகையில், எங்களது வீடுகளை இடிக்க கூடாது. எங்களுக்கு வசதிகளுடன் கூடிய உரிய மாற்று இடம் அளிக்க வேண்டும். அதற்கு கால அவகாசம் தேவை என்றனர்.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட 2 முஸ்லிம் பெண்கள் பொக்லைன் எந்திரம் முன்பு தொழுகையில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மின் இணைப்புகள் துண்டிப்பு

அப்போது ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில் 2 நாட்களில் வீடுகளை காலி செய்து தர வேண்டும். இல்லையென்றால் மீண்டும் வீடுகளை இடிக்க பொக்லைன் எந்திரம் கொண்டு வரப்படும் என தெரிவித்தனர். அதன்பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.

தற்போது அங்குள்ள 41 வீடுகளுக்கும் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com