மகளிர் உரிமைத்தொகை கேட்டு பெண்கள் மறியல்

கந்தர்வகோட்டை தாசில்தார் அலுவலகத்தில் இ-சேவை மையம் செயல்படவில்லை. மகளிர் உரிமைத்தொகை கேட்டு பெண்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மகளிர் உரிமைத்தொகை கேட்டு பெண்கள் மறியல்
Published on

சாலை மறியல்

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை தாசில்தார் அலுவலகத்தில் மகளிர் உரிமைத்தொகைக்காக மேல்முறையீடு செய்ய சுமார் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டனர். அப்போது அலுவலகத்தில் இ-சேவை மையம் செயல்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் திடீரென தாலுகா அலுவலகத்தின் நிர்வாகத்தை கண்டித்து புதுக்கோட்டை-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த தாசில்தார் ராமசாமி மற்றும் அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

அப்போது பெண்கள், தாங்கள் மகளிர் உரிமைத்தொகை பெற மேல்முறையீடு செய்வதற்காக பல நாட்களாக சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் உள்ள தாசில்தார் அலுவலகத்திற்கு எங்களது விவசாய பணி, 100 நாள் வேலை ஆகிய வருமானம் தரக்கூடிய வேலைகளை விட்டுவிட்டு இங்கு வருகிறோம்.

ஆனால் தாசில்தார் அலுவலகத்திற்கு வந்தால் இ-சேவை மையம் செயல்படவில்லை. அப்படியே இ-சேவை மையத்தில் ஆட்கள் இருந்தாலும், இணைய சேவை கிடைக்கவில்லை என்று கூறி எங்களை அதிகாரிகள் அலைய விடுகிறார்கள். எனவே மேல்முறையீடு செய்ய வந்த பெண்களிடம் உரியவாறு மேல் முறையீடு செய்து உரிமைத்தொகை கிடைக்கப் பெறாத தகுதி உடைய பெண்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் வாக்குறுதி அளித்தார். அதன் பேரில் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் மறியலை கவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் புதுக்கோட்டை-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com