மகளிர் அணி செயலாளர்களை ரஜினிகாந்த் சந்திக்கிறார் சென்னையில் 20-ந்தேதி ஏற்பாடு

மாவட்ட செயலாளர்கள், இளைஞரணியினரை தொடர்ந்து மகளிர் அணி செயலாளர்களுடன் சென்னையில் வருகிற 20-ந்தேதி ரஜினிகாந்த் ஆலோசனை நடத்துகிறார்.
மகளிர் அணி செயலாளர்களை ரஜினிகாந்த் சந்திக்கிறார் சென்னையில் 20-ந்தேதி ஏற்பாடு
Published on

சென்னை,

அரசியல் கட்சி தொடங்கி, வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாக ரஜினிகாந்த் அறிவித்தார். இதையடுத்து புதிய கட்சி தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதற்காக ரஜினி மக்கள் மன்றம் ஆரம்பிக்கப்பட்டு, மாவட்டங்கள் முழுவதும் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கையும் ஒரு பக்கம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. காலா இசை வெளியீட்டு விழா கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடந்தது. இந்த விழாவை தொடர்ந்து ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் உடன் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, மாவட்ட செயலாளர்களுக்கு ரஜினிகாந்த் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இதையடுத்து கடந்த 13-ந்தேதி ரஜினி மக்கள் மன்ற இளைஞர் அணி நிர்வாகிகளுடன் போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார். அப்போது கட்சியின் கட்டமைப்புகளை பலப்படுத்தவேண்டும்.

இளைஞர்களை அதிக அளவில் கட்சியில் உறுப்பினர்களாக சேர்க்கவேண்டும் என்று பல்வேறு அடுக்கடுக்கான ஆலோசனைகளை ரஜினிகாந்த் வழங்கினார். இந்தநிலையில், மாவட்ட மகளிர் அணி செயலாளர்களை ரஜினிகாந்த் சந்திக்க உள்ளார்.

இதுகுறித்து ரஜினி மக்கள் மன்ற செயலாளர் ராஜூ மகாலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில அனைத்து ரஜினி மக்கள் மன்ற மாவட்ட மகளிர் அணி செயலாளர்களை நமது தலைவர் ரஜினிகாந்த் வருகிற 20-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணி அளவில் சந்திக்க இருக்கிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

போயஸ்கார்டன் இல்லத்தில் வைத்து ரஜினிகாந்த் மகளிரணி செயலாளர்களை சந்தித்து கட்சியை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை வழங்குவார் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com