

சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சியின் சிறப்பு திட்டங்கள் துறையின் கீழ் செயல்படும், பாலினம் மற்றும் கொள்கை ஆய்வகத்தின் சார்பில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு “She Leads & Drives the City” என்ற தலைப்பில் தூய்மைப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பெண் ஓட்டுநர்கள் சிறப்பு கவுரவிப்பு நிகழ்ச்சி மெரினா கடற்கரை, விவேகானந்தர் இல்லம் எதிரில் உள்ள நீலக்கொடிக் கடற்கரை பகுதி 2-ல் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் கிருத்திகா உதயநிதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் சமூக செயல்பாடுகள் தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. மேலும், பெண்களை போற்றுதல், கவுரவப்படுத்துதல் தொடர்பாக சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, "நகரை வழிநடத்தும் அவள், நகரை முன்னேற்றும் அவள்” என்ற கருத்தை மையப்படுத்தி, நகரின் பொது சேவை மற்றும் நகரப் போக்குவரத்து துறைகளில் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் பெண்களின் பங்களிப்பை பாராட்டும் நோக்கில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் திடக் கழிவு மேலாண்மை மற்றும் பொது சுகாதாரப் பணிகள், துப்புரவு மற்றும் தூய்மைப் பணிகளில் பெண்கள் முக்கிய பங்காற்றி வருகின்றனர். தினந்தோறும் சாலை தூய்மைப்படுத்துதல், வீடு தோறும் குப்பைகள் சேகரிப்பு மற்றும் கழிவு மேலாண்மை பணிகள் மூலம் நகரின் சுத்தம், சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பெண்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.
அதேபோல், நிறையப் பெண்கள் ஆட்டோ ஓட்டுநர்களாக பணிபுரிந்து, பாரம்பரிய பாலின தடைகளை முறியடித்து நகரின் வாகன இயக்கத்தில் முக்கிய பங்காற்றி வருகின்றனர். இவர்களின் சேவைகளால் பெண் பயணிகள் பாதுகாப்பு மற்றும் நம்பிக்கை உணர்வு ஏற்படுத்துவதுடன், நகரப் போக்குவரத்தில் பெண்களின் பங்களிப்பை மேலும் வலுப்படுத்துகிறது. இச்சிறப்பு பணிகளை மேற்கொள்ளும் இப்பெண் பணியாளர்களை கவுரவப்படுத்தும் விதமாக சர்வதேச மகளிர் தினத்தில் பெருநகர சென்னை மாநகராட்சியின் பாலினம் மற்றும் கொள்கை ஆய்வகத்தின் சார்பில், 400 பெண் சுகாதாரப் பணியாளர்கள், 400 பெண் தூய்மைப் பணியாளர்கள், 200 பெண் ஓட்டுநர்கள் என மொத்தம் 1,000 பெண் பணியாளர்களை கவுரவப்படுத்தும் விதமாக 15 பணியாளர்களுக்கு கிருத்திகா உதயநிதி கீரீடம் மற்றும் பரிசுகளை வழங்கி கவுரவித்தார். பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசிய கிருத்திகா உதயநிதி கூறியதாவது:-
சென்னை மாநகராட்சியில் சாலைகள், பூங்காக்கள், கழிவறைகள், பொது இடங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நாள்தோறும் பெண் தூய்மை பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது சாலையில் செல்லும்போது பார்த்து செல்வேன். இவர்களுடைய பணியினால் தான் இந்த நகரம் அழகாகவும், சுகாதாரமாகவும், உள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
மேலும் நான் பள்ளி காலங்களில் பேருந்துகளில் செல்லும் பொழுதும் ஆட்டோவில் செல்லும் பொழுதும் ஆண் ஓட்டுநர்கள் மட்டுமே இருந்தனர். ஆனால் தற்பொழுது பிங்க் நிற ஆட்டோக்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் ஓட்டுபவர்களாக நிறைய பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த பெண் பணியாளர்களை சிறப்பித்து கவுரவப்படுத்தும் நிகழ்ச்சியில் நான் பங்கேற்றுள்ளது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் பாலினம் மற்றும் கொள்கை ஆய்வக பணியாளர்கள் இந்நிகழ்ச்சினை சிறப்புடன் ஏற்பாடு செய்துள்ளனர். அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் மகளிர் தின வாழ்த்துகளையும், நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.