'மகளிர் உரிமைத் தொகை அனைவருக்கும் கிடைக்கவில்லை; அதைத்தான் குஷ்பு கேட்டுள்ளார்' - விஜயதாரணி

மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தில் பாரபட்சம் நிலவுகிறது என முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதாரணி குற்றம்சாட்டியுள்ளார்.
'மகளிர் உரிமைத் தொகை அனைவருக்கும் கிடைக்கவில்லை; அதைத்தான் குஷ்பு கேட்டுள்ளார்' - விஜயதாரணி
Published on

நாகர்கோவில்,

தமிழக அரசின் 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்' குறித்து பா.ஜ.க. தேசிய மகளிரணி ஆணைய உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு பேசிய கருத்துக்கு தி.மு.க.வினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சமீபத்தில் பா.ஜ.க.வில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதாரணி நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை நான் வரவேற்கிறேன். எந்த கட்சியாக இருந்தாலும் மக்களுக்கு தேவையானதை செய்ய வேண்டும். அதே சமயம், தாலிக்கு தங்கம் திட்டத்தை ஜெயலலிதா கொண்டு வந்தார் என்பதற்காகவே அதை நிராகரிக்கிறார்கள்.

மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்திலும் பாரபட்சம் நிலவுகிறது. கட்சிக்காரர்களுக்கு மட்டுமே மகளிர் உரிமைத் தொகை கொடுக்கப்படுவதாக சில இடங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அனைத்து பெண்களுக்கும் மகளிர் உரிமைத் தொகையை வழங்குவோம் என தேர்தல் அறிக்கையில் தி.மு.க. கூறியிருந்தது. ஆனால் அது அனைவருக்கும் கிடைக்கவில்லை. அதைத்தான் குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்."

இவ்வாறு விஜயதாரணி தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com