மகளிர் சுய உதவிக் குழு: அடையாள அட்டைகள் வழங்கும் பணியை 9 மாதங்களில் முடிக்க இலக்கு

அரசால் உருவாக்கப்பட்ட சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த மகளிருக்கு முதல் கட்டமாக வழங்கப்பட உள்ளது.
சென்னை,
தமிழ்நாட்டில் மகளிர் சுய உதவிக் குழுக்களில் இடம்பெற்றுள்ள 60 லட்சம் மகளிருக்கு அடையாள அட்டைகள் வழங்கும் பணியை 9 மாதங்களில் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது .
அரசால் உருவாக்கப்பட்ட சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த மகளிருக்கு முதல் கட்டமாகவும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட குழுக்களின் உறுப்பினர்களுக்கு 2வது கட்டமாகவும் அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளது.
மகளிர் சுய உதவிக்குழு அடையாள அட்டை வைத்திருக்கும் பெண்கள், ஏசி பேருந்துகளைத் தவிர்த்து அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் 25 கிலோ வரை தயாரிப்பு பொருட்களைக் கட்டணமின்றி எடுத்த செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
கோ-ஆப்டெக்ஸில் துணிகள் வாங்கும் போது 5% கூடுதல் தள்ளுபடியும் வழங்கப்படும். கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை வழங்கக்கூடிய கடனுதவி திட்டங்களில் முன்னுரிமை அளிக்கப்படும்.
ஆவின் நிறுவன பொருள்களைச் சலுகை விலையில் பெறலாம். இணையச் சேவை மய்யங்களின் சேவைகளைப் பெறும் போது, 10% தள்ளுபடி அளிக்கப்படும்.






