

சென்னை,
நடிகர் தனுஷ் 'தமிழக எழுச்சிக் கழகம்' என்ற பெயரில் புதிய கட்சி தொடங்க உள்ளதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், நற்பணி இயக்கமாக மாற்றப்பட்ட அவரது ரசிகர் மன்றங்களின் கட்டமைப்பை வலுப்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
முதல் கட்டமாக கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷின் ரசிகர் மன்றங்கள் தனுஷ் நற்பணி இயக்கமாக மாற்றப்பட்டு தமிழகம் முழுவதும் பரவலாக செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தனுஷ் நற்பணி இயக்கத்தின் சார்பில், சென்னை ஓ.எம்.ஆர். சாலை செம்மஞ்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில், மாவட்ட நிர்வாகிகளை தனுஷ் நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொள்ளும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இந்த மகளிர் அணி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில், தமிழ்நாடு முழுவதும் இருந்து சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். முன்னதாக மகளிரணி சந்திப்புக்கு வந்தவர்களுக்கு சிக்கன் பிரியாணி, முட்டை, பிரட் அல்வா என அசத்தல் விருந்து வைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து நிகழ்ச்சிக்கு வந்த தனுஷ் நற்பணி இயக்க மகளிர் நிர்வாகிகள் கூட்டத்திற்கு வந்த பெண் நிர்வாகிகளுக்கு தீபாவளி பரிசாக வெள்ளி காமாட்சி விளக்குகளை தனுஷ் வழங்கினார். அந்த விளக்கின் அடிப்பகுதியில் தாமரை சின்னம் பொறிக்கப்பட்டு இருந்தது கவனத்தை ஈர்த்துள்ளது.
பிரபல நகைக்கடையில் இருந்து வாங்கப்பட்ட அந்த விளக்கில் இந்த தாமரை சின்னத்தை பொறித்து பிரத்தியேகமாக வழங்குமாறு தனுஷ் தரப்பில் இருந்து கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. தனுஷ் அறிவிக்க உள்ள அரசியல் கட்சியின் சின்னத்தில் இந்த தாமரை முக்கிய பங்காக இருக்குமோ? என்ற கேள்வியும் நிலவுகிறது. வெள்ளி காமாட்சி விளக்குக்காக மட்டும் சுமார் ரூ.1.5 கோடி செலவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.