

சென்னை,
வடகிழக்குப் பருவமழை முடியும் வரை மழைநீர் வடிகாலை அகற்ற வேண்டாம் என ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
பெருநகர சென்னை மாநகராட்சி, இராயபுரம் மண்டலத்தில் உள்ள பிராட்வே பேருந்து நிலையத்தில் ரூ.822.70 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணியினை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., அவர்கள் இன்று (01.09.2026) பார்வையிட்டு ஆய்வு செய்தார். இப்பணிகளை உரிய தொழில்நுட்ப வழிகாட்டுதலின்படி, மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகளை முன்னிட்டு, இவ்விடத்தில் அமையப்பெற்றுள்ள இரண்டு கட்டடங்களை அகற்றி, அதற்கு மாற்று ஏற்பாடு செய்திடவும், இப்பகுதியில் உள்ள 20 குடும்பத்தினருக்கு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்து வழங்குவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும், இந்தகட்டுமானப் பணிகள் நடைபெறும் பகுதியில் ஏற்கனவே அமையப்பெற்றுள்ள மழைநீர் வடிகாலினை வடகிழக்குப் பருமழையினை முன்னிட்டு தற்சமயம் அதனை அகற்றாமல், வடகிழக்குப் பருவமழை முடிவுற்றதற்குப் பின்னர் அதனை அகற்றி அதற்கு பதிலாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் ஆணையாளர் அவர்கள் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, வடக்கு வட்டார துணை ஆணையாளர் ஸ்வேதா சுமன், இ.ஆ.ப., சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனத்தின் அலுவலர்கள் (CMAML) மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.