தேர்தலில் போட்டியிடாத அரசியல் கட்சிகளை பட்டியலிலிருந்து நீக்கும் பணி தொடக்கம்


தேர்தலில் போட்டியிடாத அரசியல் கட்சிகளை பட்டியலிலிருந்து நீக்கும் பணி தொடக்கம்
x

சென்னையில் கடந்த ஆறு ஆண்டுகளில் ஒரு தேர்தலில் கூட போட்டியிடாத 14 கட்சிகள் தற்போது வரை அடையாளம் காணப்பட்டுள்ளன.

சென்னை,

இந்திய தேர்தல் ஆணையம், பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத 345 அரசியல் கட்சிகளை முதற்கட்டமாக பட்டியலிலிருந்து நீக்கும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் 2019ஆம் ஆண்டு முதல் கடந்த 6 ஆண்டுகளாக ஒரு தேர்தலில் கூட போட்டியிட வேண்டும் என்ற அத்தியாவசிய நிபந்தனையை நிறைவேற்றத் தவறியுள்ள மற்றும் இருப்பிடம் கண்டறிய முடியாத கட்சிகள் என்பதன் காரணமாக 14 பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை (RUPPs) முதற்கட்டமாக பட்டியலிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கையை இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைவர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையாளர்கள் டாக்டர் சுக்பீர் சிங் சந்து மற்றும் டாக்டர் விவேக் ஜோஷி ஆகியோர் தலைமையில் தொடங்கியுள்ளது. 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு கடந்த ஆறு ஆண்டுகளில் ஒரு தேர்தலில் கூட போட்டியிடாததும், அவற்றின் அலுவலகங்கள் எந்த இடத்திலும் அடையாளம் காணப்படாததும் காரணமாக, சென்னை மாவட்டத்தில் கீழ்காணும் 14 கட்சிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

வில்லிவாக்கம் ஆல் இந்தியா ஆதித்தனார் மக்கள் கட்சி, கொளத்தூர் ஆல் இந்தியா உமண்ஸ் டெமாகிராட்டிக் ப்பீரீடம் பார்டி, ஆயிரம்விளக்கு அம்பேத்கர் பிபுல்ஸ் மூவ்மென்ட், வேளச்சேரி பழைய பெயர்- காந்திய மக்கள் இயக்கம் புதிய பெயர் – காமராஜ் மக்கள் இயக்கம், கொளத்தூர் மகாபாரத் மஹாஜன் சபா, ராயபுரம் மீனவர் மக்கள் முன்னணி, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி நல்வழிக்கழகம், விருகம்பாக்கம் நேசனல் ஆர்கனைசேஷன் காங்கிரஸ், மயிலாப்பூர் நியூ லைப் பிபுள்ஸ் பார்டி, வேளச்சேரி பசும்பொன் மக்கள் கழகம், எழும்பூர் தமிழ் மாநில கட்சி, ஆயிரம்விளக்கு தமிழ்நாடு பேசன்ட்ஸ் & ஒர்கர்ஸ் பார்டி, விருகம்பாக்கம் வளமான தமிழகம் கட்சி, விருகம்பாக்கம் யூத் ஆண்ட் ஸ்டுடன்ட்ஸ் பார்டி.

இந்திய தேர்தல் ஆணையத்தில் தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள 2,800க்கும் மேற்பட்ட பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளில் பல கட்சிகள் பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளாக தொடர தேவையான நிபந்தனைகளை பூர்த்தி செய்யாதது தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு வந்துள்ளது. எனவே, நாடு முழுவதும் இத்தகைய கட்சிகளை அடையாளம் காணும் பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. இதனடிப்படையில் சென்னை மாவட்டத்தில் 14 கட்சிகள் தற்போது வரை அடையாளம் காணப்பட்டுள்ளன. எந்த கட்சியும் தேவையில்லாமல் பட்டியலிலிருந்து நீக்கப்படக்கூடாது என்பதற்காக, சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு அந்த கட்சிகளுக்கு காரணம் கூற நோட்டீஸ் (Show Cause Notice) அனுப்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்பின், அவை தலைமை தேர்தல் அதிகாரிகளால் நடத்தப்படும் விசாரணையின் வாயிலாக அவற்றுக்கு விளக்கம் தரும் வாய்ப்பு அளிக்கப்படும். எந்தவொரு பதிவுசெய்யப்பட்ட அங்கீரிக்கப்படாத அரசியல் கட்சிகளை பட்டியலிலிருந்து நீக்குவது தொடர்பான இறுதி முடிவை இந்திய தேர்தல் ஆணையம் எடுக்கும்.

நாட்டிலுள்ள அரசியல் கட்சிகள் (தேசிய/மாநில/பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள்), 1951ஆம் ஆண்டின் மக்களாட்சி பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 29இன் கீழ் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இந்தச் சட்டப்பிரிவின் கீழ், அரசியல் கட்சிகளாக பதிவு செய்யப்பட்ட அமைப்புகள் வரிவிலக்கு போன்ற பல நன்மைகளை பெறுகின்றன.

2019ஆம் ஆண்டிலிருந்து நாடாளுமன்றம் மற்றும் மாநில/யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கான பொதுத்தேர்தல் அல்லது இடைத்தேர்தல்கள் எதிலும் போட்டியிடாத கட்சிகளையும், இருப்பிடம் கண்டறிய முடியாத கட்சிகளையும் நீக்குவதன் மூலம் அரசியல் அமைப்பை தூய்மைப்படுத்துவதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும். அரசியல் அமைப்பை சீர்ப்படுத்தும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.

மேற்கண்ட தகவலை சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story