

சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23-ந் தேதி (அதாவது நேற்று) நடை பெறும் என்று தேர்தல்கமிஷன் அறிவித்து இருந்தது. அறிவிப்பை தொடர்ந்து தமிழகத்தில் அரசியல் கட்சிகள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டன. ஆளும் தி.மு.க., எதிர்க்கட்சியான அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி, புதிய வரவான தமிழக வெற்றிக்கழகம் என 4 முனை போட்டி நிலவியது.
இதனையடுத்து நேற்று சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நீடித்தது. மொத்த வாக்காளர் எண்ணிக்கை 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 ஆகும். அவர்களில் 2 கோடியே 80 லட்சத்து 30 ஆயிரத்து 658 பேர் ஆண்கள். 2 கோடியே 93 லட்சத்து 4 ஆயிரத்து 905 பேர் பெண்கள், 7,728 பேர் மூன்றாம் பாலினத்தவர் ஆவார்கள்.
காலை 7 மணியில் இருந்தே வாக்காளர்கள் வருகை காணப்பட்டது. இளைஞர்கள், இளம்பெண்கள் உற்சாகத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்தனர். காலையிலேயே வாக்காளர்கள் வரிசையில் நிற்கத் தொடங்கினர். பாதுகாப்புப்பணியில் போலீசாரும், துணை ராணுவத்தினரும் ஈடுபட்டனர். தமிழகத்துக்கு வந்துள்ள தேர்தல் பார்வையாளர்கள் அவ்வப்போது வந்து வாக்குப்பதிவை கண்காணித்தனர். 300 கம்பெனி துணை ராணுவத்தினர் வந்துள்ள நிலையில், பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் துணை ராணுவத்தினர் பணியமர்த்தப்பட்டனர். 83 ஆயிரத்து 875 தமிழக போலீசாரும், 3 லட்சத்து 60 ஆயிரத்து 68 அரசு ஊழியர்களும் தேர்தல் பணியில் ஈடுபட்டனர்.
மொத்தமுள்ள 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடிகளில், 1 லட்சத்து 6 ஆயிரத்து 418 வாக்குப்பதிவு எந்திரங்கள், 75 ஆயிரத்து 64 எண்ணிக்கையில் கட்டுப்பாட்டு எந்திரங்கள் மற்றும் வாக்கை உறுதி செய்யும் 'விவிபாட்' எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. அதோடு கூடுதலாக 20 சதவீத வாக்குப்பதிவு எந்திரங்களும், கட்டுப்பாட்டு எந்திரங்களும் 'ரிசர்வில்' வைக்கப்பட்டு இருந்தன. 30 சதவீத விவிபாட் எந்திரங்கள் ரிசர்வில் வைக்கப்பட்டு இருந்தன.
சில இடங்களில் எந்திரங்களின் பழுதால் வாக்குப்பதிவு காலதாமதமாக தொடங்கியது. இதுதவிர சில இடங்களில் வன்முறை நடந்ததால் வாக்குப்பதிவு நிறுத்திவைக்கப்பட்டது. பின்னர் சிறிது நேரம் கழித்து தொடங்கியது. சரியாக மாலை 6 மணிக்கு வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள மையங்களின் பிரதான கதவுகள் அடைக்கப்பட்டன. அந்த மையங்களுக்குள் ஏற்கனவே வந்திருந்தவர்களுக்கு மட்டும் டோக்கன் தரப்பட்டு வாக்குப்பதிவு தொடர்ந்து நடந்தது.
இதனிடையே வாக்குப்பதிவு விவரங்களை தேர்தல் கமிஷன் 2 மணி நேரத்திற்கு ஒருமுறை வெளியிட்டு வந்தது. வாக்குப்பதிவு முடிவடைந்ததும் அங்கிருந்த அரசியல் கட்சிகளின் முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் மூடி சீல் வைக்கப்பட்டன. பின்னர் அவை உரிய பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள பாதுகாப்பு அறைகளுக்கு கொண்டு செல்லப்பட்டன.
கடந்த தேர்தல்களைவிட இந்த தேர்தலில் நடந்துள்ள வாக்குப்பதிவு மிகவும் வித்தியாசமானதாகும். ஏனென்றால், தமிழக தேர்தல் சரித்திரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 85.15 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதற்கு முன்பு நடந்த தேர்தல்களில் பதிவானதைவிட நேற்று பதிவான வாக்கு சதவீதம் அதிகமாகும். இந்த தேர்தலில் மொத்த வாக்காளர்கள் 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291; அதில் வாக்களித்தோர் சுமார் 4.81 கோடி.
இந்நிலையில் தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை சரிபார்க்கும் பணிகள் தற்போது தொடங்கி உள்ளது. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் வேட்பாளர்களின் முகவர்களுக்கு வழங்கப்பட்ட படிவம் 17C-யில் பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கையுடன், மொத்தம் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை விபரங்கள் ஒப்பீடு செய்து சரிபார்க்கப்படுகிறது. தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தேர்தல் பார்வையாளர்கள் இணைந்து இப்பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
சரிபார்ப்புப் பணி முடிந்த பின், தொகுதி வாரியாக வாக்குகளின் புள்ளி விவரங்கள் வெளியாகும்.