ஊட்டியில் ரூ.40 லட்சம் செலவில் நாய்களுக்கான பூங்கா அமைக்கும் பணிகள் தீவிரம்

பொது இடங்களில் நாய்களை அழைத்து வருவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
ஊட்டி,
மனிதனுக்கான செல்லப்பிராணிகள் பட்டியலில் நாய்கள் முதலிடம் பிடிக்கிறது. காலை, மாலையில் நாய்களுடன் நடைபயிற்சி செய்வதை பலரும் விரும்புகின்றனர். சமீபத்தில் தமிழகம் முழுவதும் நாய் கடியால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் பொது இடங்களில் நாய்களை அழைத்து வருவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதேபோல் நாய்கள் உள்பட செல்லப்பிராணிகள் வளர்ப்போர், அவற்றை பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் சுற்றுலா தலமான ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் சிலர் நாயையும் அழைத்து வருகின்றனர். ஆனால், இங்குள்ள பூங்காக்கள், படகு இல்லம் உள்ளிட்ட இடங்களுக்கு நாயை அழைத்து செல்ல முடியாமல், அவற்றை தனியாக அறையில் விட்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதை தவிர்ப்பதற்காகவும், ஊட்டியில் நாய்கள் வளர்ப்பவர்கள், அவற்றை தனியாக நடைபயிற்சிக்கு அழைத்து செல்வதற்காகவும் நாய்களுக்கான சிறப்பு பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதற்காக சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக இருந்த ஊட்டி மரவியல் பூங்கா தேர்வு செய்யப்பட்டு, அங்கு நாய்களுக்கான பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இங்கு நாய்களுக்கான சிறப்பு உபகரணங்கள் இருக்கும். புற்களால் அமைக்கப்பட்ட சுரங்கப்பாதை, காய்ந்த இறகுகள் மூலம் செய்யப்பட்ட குளம், பிரிங்லர் உள்பட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது.
இந்தியாவில் ஐதராபாத்தில் முதன் முதலில் நாய்களுக்கான பூங்கா அமைக்கப்பட்ட நிலையில், அதைத்தொடர்ந்து சண்டிகர் உள்பட பல இடங்களில் அமைக்கப்பட்டது. இதேபோல் தமிழகத்தில் சென்னை மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட டிமாண்டி காலனியில் நாய்களுக்கான பூங்கா அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டாலும், இதுவரை பயன்பாட்டுக்கு வரவில்லை. அந்த வகையில் தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் முதல் முறையாக நாய்களுக்கான பூங்கா அமையள்ளது.
இதுகுறித்து நீலகிரி கலெக்டர் லட்சுமி பவ்யா கூறியதாவது:-
வருவாய்த்துறைக்கு சொந்தமான ஊட்டி மரவியல் பூங்காவில் ரூ.40 லட்சம் செலவில் நாய்களுக்கான பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இது நாய்களுக்கு மிகப்பெரிய புத்துணர்வு மையமாக இருக்கும். இதன் பராமரிப்பு பணிகள் தோட்டக்கலைத்துறையிடம் இருக்கும். இந்த பூங்கா அமைக்கும் பணிக்காக மரவியல் பூங்காவில் ஏற்கனவே இருக்கும் ஒரு மரம் கூட வெட்டப்பட மாட்டாது.
சோதனை முயற்சியாக தொடங்கப்பட்டு, இது சிறப்பாக இருக்கும் பட்சத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. இன்னும் சில நாட்களில் பணிகள் முடிந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.






